அரசு போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக: சீமான் வலியுறுத்தல்!
அரசு போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்
போக்குவரத்து துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய அகவிலைப்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், புதிய ஊதிய ஒப்பந்த பேச்சை தொடங்க வேண்டும், கருணை அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 9ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக போக்குவரத்து ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி, வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிடச் செய்து பொதுமக்கள் நலனைப் பாதுகாக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வழங்க மறுத்து அவர்களின் உழைப்பினை உறிஞ்சும் தமிழ்நாடு அரசின் கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்துக்குரியது.
போக்குவரத்து ஊழியர்களின் அடிப்படை உரிமைகளை வழங்க மறுத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கி, வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்கு தமிழ்நாடு அரசே தள்ளுவதென்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 14ஆவது முறையாக மீண்டும் நீட்டிப்பு!
ஆகவே, போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப்போராட்டம் மூலம் எளிய மக்களுக்கான பொது பயண சேவை பாதிக்கப்படாமலிருக்க, அவர்களின் நீண்டகால நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான பேச்சுவார்த்தையை திமுக அரசு உடனடியாகத் தொடங்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
மேலும், தங்களின் அடிப்படை உரிமைகளை மீட்டெடுப்பதற்காக போக்குவரத்து தொழிலாளர்கள் முன்னெடுக்கும் வேலைநிறுத்தம் உள்ளிட்ட அனைத்து அறப்போராட்டங்களுக்கும் நாம் தமிழர் கட்சி தமது முழுமையான ஆதரவை அளிப்பதோடு, கோரிக்கைகள் வெல்லும்வரை தோள் கொடுத்து துணைநிற்கும் என்றும் உறுதியளிக்கிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.