ஆஸ்திரியாவின் க்ராஸ் க்ளோக்னர் சிகரத்தில், குளிரில் உறைந்து போகும் நிலையில் தனது 33 வயது காதலியைக் கைவிட்டுச் சென்றதாக 39 வயது நபர் மீது கொலை வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
ஆஸ்திரியாவின் மிக உயரமான மலையான க்ராஸ் க்ளோக்னர் (Grossglockner) சிகரத்தில், குளிரில் உறைந்து போகும் நிலையில் 33 வயது காதலியைக் கைவிட்டுச் சென்றதாக 39 வயது நபர் மீது கொலை வழக்குத் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் கடந்த ஜனவரி மாதம் கடுங்குளிர் காலத்தில் நிகழ்ந்தது. குற்றம்சாட்டப்படும் நபர் மலையேறும் அனுபவம் மிக்கவர். ஆனால், அவரது காதலி மலையேறுவதில் ஆரம்ப நிலையில் இருந்தவர்.
மலை உச்சியில் கைவிடப்பட்ட காதலி
33 வயதான அந்தப் பெண் 12,460 அடி உயர க்ராஸ் க்ளோக்னர் சிகரத்தின் உச்சியில் இருந்து வெறும் 150 அடி கீழே இருந்துள்ளார். கொடும் பனியில் பாதுகாப்பு இல்லாமல் கைவிடப்பட்ட நிலையில் இருந்த அவர் உடல்வெப்பம் குறைந்து, உயிரிழந்துள்ளார்.
சால்ஸ்பர்க்கைச் சேர்ந்தவரும், அனுபவம் வாய்ந்த மலையேறுபவருமான அந்தக் காதலன், உதவி தேடிச் செல்வதாகக் கூறி, ஆறு மணிநேரத்திற்கும் மேலாகப் பெண்ணைக் கைவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. மலையேற்ற அனுபவம் உள்ளவர் என்பதாலும் பயணத்தைத் இவரே திட்டமிட்டார் என்பதாலும் பெண்ணின் பாதுகாப்பிற்கு இவரே பொறுப்பு என்று அதிகாரிகள் வாதிடுகின்றனர்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது எனவும் அதிகாரிகள் சொல்கிறார்கள்.
அலட்சியமாகச் சென்ற காதலன்
காதலர்கள் இருவரும் மலையேற்றத்தை இரண்டு மணி நேரம் தாமதமாகத் தொடங்கியுள்ளனர். மேலும் சரியான அவசரகால உபகரணங்கள் அவர்களிடம் இல்லை. பாதிக்கப்பட்ட பெண், ஆபத்தான ஆல்பைன் பகுதிகளுக்குப் பொருத்தமற்ற ஸ்ப்ளிட்போர்டும் மென்மையான பனிக் காலணிகளும் அணிந்திருந்துள்ளார். அவர்கள் மணிக்கு 46 மைல் வேகத்தில் வீசிய காற்றையும், மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையையும் எதிர்கொண்டிருக்கிறார்கள்.
அனுபவமற்ற தனது காதலியின் நிலையைப் பொருட்படுத்தாமல், ஆபத்துக்கான வாய்ப்பு இருப்பதைக் கணித்து இரவு வருவதற்கு முன்பே அவசரகாலச் உதவியை அழைக்கத் தவறியதாகவும் அந்த நபர் மீது அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
சைலண்டில் இருந்த செல்போன்
மேலும், தனது கைப்பேசியை அவர் சைலண்ட் (silent) நிலையில் வைத்திருந்ததால், மீட்புப் படையினரின் அழைப்புகளை அவர் தவறவிட்டுள்ளார். மீட்பு குழுவினர் பெண்ணை காலை 10 மணியளவில் அடைந்தபோது, அவர் ஏற்கெனவே இறந்துபோய்விட்டார். பலத்த காற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் அந்த இடத்துக்குச் செல்வதைத் தாமதப்படுத்தியது.
குற்றவாளியின் வழக்கறிஞர், இந்தச் சம்பவத்தை ஒரு துயரமான விபத்து என்று கூறுகிறார். இந்த வழக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி அன்று இன்ஸ்ப்ரூக் பிராந்திய நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது.


