ஆப்கானிஸ்தானில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 ஆகப் பதிவு
ஹெராட் நகரின் வடமேற்கில் பல நிலநடுக்கங்கள் ஏற்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, மறுபடியும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மற்றொரு சக்திவாய்ந்த 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் புதன்கிழமை வடமேற்கு ஆப்கானிஸ்தானைத் தாக்கியுள்ளது என புவி அறிவியல்களுக்கான ஜெர்மன் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது. இந்த நடுக்கம் 10 கிமீ ஆழத்தில் உணரப்பட்டதாகவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றைய நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடித் தகவல் ஏதும் இல்லை.
ஹெராட் நகரின் வடமேற்கில் பல நிலநடுக்கங்கள் ஏற்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, மறுபடியும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை தாக்கிய தொடர் நிலநடுக்கங்களில் 4,000 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமாயின.
ஆப்கானிஸ்தான் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (ANDMA) செய்தித் தொடர்பாளர் முல்லா சாய்க், சனிக்கிழமையன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,000ஐத் தாண்டியதை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், 20 கிராமங்களில் உள்ள 2,000 வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையில், ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான அலுவலகம் நிலநடுக்கத்தை எதிர்கொள்ள 5 மில்லியன் டாலர் மதிப்பிலான உதவியை அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு, பெரும்பாலும் வெளிநாட்டு உதவியை நம்பியுள்ளது. தாலிபான் ஆட்சியைக் கைப்பற்றி இரண்டு ஆண்டுகளில் பல சர்வதேச உதவிகள் நிறுத்தப்பட்டன.
துருக்கி மற்றும் சிரியாவில் சுமார் 50,000 பேரைக் கொன்ற பயங்கர நிலநடுக்கங்கள் கடந்த பிப்ரவரி மாதம் நிகழ்ந்தது. உலகிலேயே மிகக் கொடிய பூகம்பங்களில் ஒன்றாக அது கருதப்படுகிறது.