நியூயார்க்கில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வாகன அணிவகுப்பிற்காக பிரான்ஸ் அதிபர் மக்ரோனின் கார் தடுத்து நிறுத்தப்பட்டது. பின்னர், காரிலிருந்து இறங்கி டிரம்ப்பிற்கு தொலைபேசியில் அழைத்து வேடிக்கையாகப் பேசிய மக்ரோன், நடந்தே தனது தூதரகம் திரும்பினார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய பின்னர் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தனது தூதரகத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, நியூயார்க் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் பாதுகாப்பு வாகன அணிவகுப்பு செல்வதற்காக மக்ரோனின் கார் நிறுத்தப்பட்டது.
டிரம்பிற்கு போன் செய்த மக்ரோன்
டிரம்பின் பாதுகாப்பு வாகனங்கள் கடந்து செல்வதற்காக சாலைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால், காரிலிருந்து இறங்கிய மக்ரோன், காவல்துறையினரிடம் விசாரித்துள்ளார். அப்போது, ஒரு காவல்துறை அதிகாரி, "மன்னிக்கவும் அதிபரே, தற்போது சாலைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்துள்ளார்.
டிரம்ப்பின் கான்வாய் கடந்து செல்ல வேண்டும் என்று காவலர்கள் தெரிவித்ததும், மக்ரோன் வேடிக்கையாக டிரம்ப்பிற்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார். நியூயார்க் மக்கள் கூட்டம் பார்த்துக்கொண்டிருக்க, தடுப்பு வேலி அருகே நின்றுகொண்டு, "நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? என்ன நடந்தது என்று தெரியுமா? உங்களுக்காகத்தான் நான் இங்கு சாலையில் காத்துக் கொண்டிருக்கிறேன், ஏனென்றால் உங்களுக்காக சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன" என்று சிரித்தவாறே கூறியுள்ளார்.
நடந்து சென்ற மக்ரோன்
டிரம்ப்பின் கான்வாய் கடந்து சென்ற பிறகு, சாலைகள் திறக்கப்பட்டன. மக்ரோன் மீண்டும் காரில் ஏறாமல், டிரம்ப்புடன் தொலைபேசியில் பேசிக்கொண்டே நடந்தே தனது பயணத்தைத் தொடர்ந்தார். இது நியூயார்க் மக்களுக்கு ஒரு அரிய காட்சியாக இருந்தது.
பொதுவாக, அதிபர்களுக்கு அளிக்கப்படும் ஆரவாரமும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல், அவர் சாதாரண மக்களைப் போலவே நடந்து சென்றார். வழியில் அவர் பலருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். லா டிபேச் (La Depeche) பத்திரிகை வெளியிட்ட அறிக்கையின்படி, ஒருவர் மக்ரோனின் நெற்றியில் முத்தமிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்த பிரான்ஸ்
முன்னதாக, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பேசிய மக்ரோன், பிரான்ஸ் பாலஸ்தீனத்தை ஒரு தனி நாடாக அதிகாரபூர்வமாக அங்கீகரிப்பதாக அறிவித்தார். இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான நீண்டகால மோதலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். "சமாதானத்திற்கான நேரம் வந்துவிட்டது" என்றும், "காசாவில் நடக்கும் போருக்கு எந்த நியாயமும் இல்லை" என்றும் அவர் கூறினார்.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் வரிசையில் பிரான்ஸ் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
