லாஸ் ஏஞ்சல்ஸில் குடியேற்ற சோதனைகளுக்கு எதிரான போராட்டங்கள் ஐந்தாவது நாளாகத் தொடரும் நிலையில், மேயர் கரேன் பாஸ் நகரின் மையப்பகுதியில் இரவு நேர ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அமெரிக்காவில் குடியேற்ற சோதனைகளுக்கு எதிராக லாஸ் ஏஞ்சல்ஸில் (Los Angeles) ஐந்தாவது நாளாகப் போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ் (Los Angeles mayor Karen Bass) நேற்று (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் அவசரநிலையை அறிவித்துள்ளார். நகரின் மையப்பகுதியில் இரவு நேர ஊரடங்கு உத்தரவையும் பிறப்பித்துள்ளார்.
மேயரின் ஊரடங்கு உத்தரவு (Mayor Karen Bass declares curfew):
இந்த ஊரடங்கு உத்தரவு செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி முதல் புதன்கிழமை காலை 6 மணி வரை அமலில் இருக்கும். 5, 10, மற்றும் 110 ஆகிய நெடுஞ்சாலைகளால் சூழப்பட்ட ஒரு சதுர மைல் பரப்பளவிற்கு இது பொருந்தும்.
"நாசவேலைகளையும், கொள்ளையடிப்புகளையும் தடுக்க நான் உள்ளூர் அவசரநிலையை அறிவித்து, டவுன்டவுன் லாஸ் ஏஞ்சல்ஸுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளேன்" என்று மேயர் பாஸ் மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
"நீங்கள் டவுன்டவுன் லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கவில்லை அல்லது வேலை செய்யவில்லை என்றால், அந்தப் பகுதியைத் தவிர்த்துவிடுங்கள். ஊரடங்கு உத்தரவை மீறும் நபர்கள் கைது செய்யப்படுவார்கள், அவர்கள் மீது வழக்குத் தொடரப்படும்" என்றும் அவர் எச்சரித்தார்.
ஊரடங்கு உத்தரவிலிருந்து விலக்கு (Los Angeles curfew exemptions):
குடியிருப்பாளர்கள், ஊழியர்கள், அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்கள் மற்றும் வீடற்றவர்களுக்கு ஊரடங்கு உத்தரவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனை LAPD தலைவர் ஜிம் மெக்டோனல் உறுதிப்படுத்தினார்.
லாஸ் ஏஞ்செல்ஸ் போராட்டங்கள் (Los Angeles as protests):
வெஸ்ட்லேக் மாவட்டம், டவுன்டவுன் மற்றும் தெற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிகளில் நடத்தப்பட்ட தொடர்ச்சியான குடியேற்ற சோதனைகளால் (federal immigration raids) ஏற்பட்ட கலவரங்களைத் தொடர்ந்து இந்த உத்தரவு வந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல், போராட்டக்காரர்கள் சட்ட அமலாக்கப் பிரிவினருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதன் விளைவாக கிட்டத்தட்ட 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிஎஸ் செய்தி தெரிவித்துள்ளது.
மேயர் பாஸ் கூற்றுப்படி, திங்கள்கிழமை இரவுவரை குறைந்தது 23 வணிக நிறுவனங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
தேசிய அளவிலான கவனம்:
அதிகரித்து வரும் லாஸ் ஏஞ்செல்ஸ் ஆர்ப்பாட்டங்கள் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கூட்டாட்சி கட்டிடங்களைப் பாதுகாக்க ஆயிரக்கணக்கான கலிபோர்னியா தேசிய காவல்துறை துருப்புக்களையும் 700 அமெரிக்க கடற்படை வீரர்களையும் நிறுத்தினார். இது கலிபோர்னியா கவர்னர் கேவின் நியூசமின் சம்மதம் இல்லாமல் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கையாகும்.
"டொனால்டு டிரம்ப் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுகிறார்" என்று நியூசம் ஞாயிற்றுக்கிழமை தனது எக்ஸ் பதிவில் எழுதினார். "ஒரு மாநில ஆளுநருடன் கலந்தாலோசிக்காமல் ஒரு மாநிலத்தின் தேசிய படைக்கு கட்டளையிடுவது சட்டவிரோதமானது; ஒழுக்கமற்றது. கலிபோர்னியா அவரை நீதிமன்றத்திற்கு இழுக்கும்." எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
ஊரடங்கு உத்தரவு மற்றும் பலத்த பாதுகாப்பு இருந்தபோதிலும், குடியேற்ற சமூகங்கள் மீதான அநீதியான அடக்குமுறைக்கு எதிராகத் தங்கள் போராட்டங்களைத் தொடரப் போவதாகப் போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.