திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீதான சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006-11ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது   கே.என்.நேரு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது.
 

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி, ரூ.60 லட்சம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கே.என்.நேரு மற்றும் அவரது மனைவி சாந்தா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த திருச்சி லஞ்ச ஒழிப்பு தடுப்பு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதர், உரிய ஆதாரங்கள் இல்லாததால் கே.என். நேரு, அவரது மனைவி மீதான வழக்கை தள்ளுபடி செய்தார்.

இந்நிலையில் கே.என்.நேரு மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், கே.என்.நேரு மீதான சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க கீழமை கோர்ட்டுக்கு உத்தரவிட்டனர்.