காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அல்ல என்று, பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒருமனதாக...
இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றத்தை தொடர்ந்து பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டு கூட்டம் கடந்த புதன் கிழமை முதல் நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற கூட்டத்தில், காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அல்ல என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
மனித உரிமை மீறல்
பாகிஸ்தான் பிரதமரின் வெளி விவகாரத்துறை ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் தாக்கல் செய்த அந்த தீர்மானத்தில் மேலும் கூறப்பட்டு இருப்பதாவது-
‘‘காஷ்மீரில் நடைபெற்றவரும் மனித உரிமை மீறல்கள் குறித்து சுதந்திரமான விசாரணை நடைபெற உலக நாடுகள் வலியுறுத்த வேண்டும். காஷ்மீர் மக்கள் மீதான இந்தியாவின் கொடுமைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
கொடுங்கோல் சட்டம்
காஷ்மீரில் பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கைது செய்து காவலில் வைக்கப்பட்டு இருப்பது கவலை அளிக்கிறது. இந்திய அரசு அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
இந்திய ராணுவத்தினரை தண்டனையில் இருந்து பாதுகாக்கும் கொடுங்கோல் சட்டங்களுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.
காஷ்மீர் ‘சர்ச்சை பகுதி’
இந்தியா கூறுவதுபோல், காஷ்மீர் அதன் ஒருங்கிணைந்த பகுதி அல்ல. ஐ.நா. சபையின் அட்டவணையில் அது ‘சர்ச்சைக்குரிய பகுதி’யாக இடம் பெற்றுள்ளது.
சர்வதேச, மனித உரிமை சட்டங்களுக்கு மதிப்பளித்து, காஷ்மீர் மக்களை அச்சுறுத்துவதை இந்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.
எல்லையில், அடிக்கடி போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் இந்தியாவுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது’’.
இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு உள்ளது.
பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவுக்கு அழைப்பு
காஷ்மீர் உள்ளிட்ட நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பயன் உள்ள பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்றும், நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
கடந்த புதன்கிழமை அன்று, கூட்டுக் கூட்டம் தொடங்கியபோது, இந்திய பிரதமர் மோடி மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், விவசாய நிலங்களில் போர் டாங்கிகளை செலுத்துவதன் மூலம் வறுமையை ஒழிக்க முடியாது என்று கூறி இருந்தார்.
காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாத இயக்க தளபதி பர்கான் வானிக்கு ‘காஷ்மீரின் துணிச்சல் மிக்க மைந்தன்’ என்றும் அவர் புகழாரம் சூட்டியது குறிப்பிடத்தக்கது.
