2016-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு கொலம்பிய அதிபர் ஜான் மனுவேல் சான்டோசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது கடந்த 50 ஆண்டுகளாக இருந்து வந்த உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வந்ததற்காக இந்த பரிசு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் மருத்துவம், இயற்பியல், வேதியியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று அமைதிக்கான நோபல் பரிசு நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அறிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு கொலம்பிய அதிபர் மானுவல் சாண்டோஸ் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக நோபல் குழு தலைவர் கேசி குல்மன் அறிவித்தார்.
கொலம்பியாவில் 50 ஆண்டு காலமாக ரோட்ரிகோ லோன்டனோ தலைமையிலான கிளர்ச்சிப்படையினருக்கும் அரசுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வந்தது. இதில் ஏறக்குறைய 2.5 லட்சம் மக்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இந்த உள்நாட்டுப்போரை அதிபர் சாண்டோஸ் அமைதிப்பேச்சு மூலம் முடிவுக்கு கொண்டுவந்தார். இது தொடர்பான ஒப்பந்தம் கடந்த மாதம் அதிபர் சாண்டோஸ், ரோட்ரிகோ லோன்டனா இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.
ஆனால், அந்த ஒப்பந்தம் குறித்து மக்கள் மத்தியில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் அதை மக்கள் புறக்கணித்தனர். ஆனால், கடந்த 50 ஆண்டுகாலம் நீடித்த போரை முடிவுக்கு கொண்டுவந்த அதிபர் சாண்டோசின் முயற்சிக்காக இந்த நோபல் பரிசு வழங்கப்படுகிறது என நோபல் குழு தெரிவித்துள்ளது.
கடந்த 1992-ம் ஆண்டுக்குப் பின், லத்தின் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
65 வயதான அதிபர் சாண்டோஸ், கொலம்பியாவின் பணக்கார குடும்பத்தில் பிறந்தவர். ஹார்வார்டு பல்கலையில் பட்டப்படிப்பு முடித்த சாண்டோஸ், அரசியலுக்கு வந்து 10 ஆண்டுகள் காலம் அந்நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சராக பதவி வகித்தார்.
