25 ஆண்டுகளாகத் நீடிக்கும் வழக்குகளை முடிக்க 9 பில்லியன் டாலர்: ஜான்சன் அண்டு ஜான்சன் அறிவிப்பு
ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் தங்கள் தயாரிப்புகள் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்குகளை முடிக்க 9 பில்லியன் டாலர் தொகையைத் தருவதாக முன்மொழிந்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்தின் பவுடர் புற்றுநோயை உண்டாக்குவதாகக் கூறி தொடரப்பட்ட வழக்குகளை முடித்து வைப்பதற்கு அந்நிறுவனம் 8.9 பில்லியன் டாலர் தொகையைத் தர முன்வருவதாக அறிவித்துள்ளது.
ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் அமெரிக்காவில் நியூ ஜெர்சியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் குழந்தைகளுக்கான ஷாம்பூ, டால்கம் பவுடர், லோஷன் உள்ளிட்டவற்றைத் தயாரித்து விற்பனை செய்துவருகிறது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் புற்றுநோயை உண்டாக்கும் அமிலத்தன்மை உடையவை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளால் பல நாடுகளில் ஜான்சன் அண்டு ஜான்சன் தயாரிப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பல ஆண்டுகளாக நீடிக்கும் வழக்குகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு தீர்வை அந்த நிறுவனம் முன்மொழிந்துள்ளது. வழக்கு தொடர்ந்த அனைவருக்கும் சேர்த்து மொத்தமாக 8.9 பில்லியன் டாலர் தொகையைக் கொடுப்பதாக ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் கூறி இருக்கிறது.
நாடு நரகத்துக்குச் செல்கிறது; உலகமே நம்மைப் பார்த்துச் சிரிக்கிறது: டிரம்ப் ஆவேசம்
வழக்குகளில் விரைவாக தீர்வு காணவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாவும் மற்றபடி தங்களின் தயாரிப்புகள் அனைத்தும் எப்போதும் பாதுகாப்பானவையே என்றும் அந்த நிறுவனம் சொல்லிக்கொள்கிறது. அந்நிறுவனத்தால் முன்மொழிப்பட்டிருக்கும் இந்தத் தீர்வுத் தொகை நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டால், அமெரிக்க வழக்குகளில் இதுவரை வழங்கப்பட்ட மிகப்பெரிய தீர்வுத் தொகையாக இது அமைக்கூடும்.
ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்புகள் மீது கடந்த 25 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஆனால், அந்த நிறுவனம் ஒருபோதும் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளவில்லை. அமெரிக்கா மற்றும் கனடாவில் 2020ஆம் ஆண்டு மே மாதம் அந்நிறுவனத்தின் பேபி பவுடரை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.
இந்த தீர்வுத்தொகையுடன் வழக்குகளை முடிப்பது தொடர்பாக வழக்கு தொடர்ந்திருக்கும் 60,000 க்கும் மேற்பட்ட நபர்களிடம் இருந்து உறுதிமொழி பெற்றுள்ளதாக அந்நிறுவனத்தைச் சேர்ந்த எரிக் ஹாஸ் கூறியுள்ளார். இதற்கு முன்பாக 2 பில்லியன் டாலர் தீர்வு தொகை தருவதாக ஜான்சன் அண்டு ஜான்சன் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், அதனை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இப்போது அதைவிட நான்கு மடங்குக்கும் மேல் தருவதாகக் கூறியிருக்கிறது.
இந்தியாவிலும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்தின் ஆலைக்கு அளிக்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்பட்டு, உற்பத்தியை நிறுத்தவும் உத்தரவிட்டது. நாடு முழுவதும் ஜான்சன் அண்டு ஜான்சன் தயாரிப்புகளை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டது.
பனாமாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 ஆகப் பதிவு