சீனாவின் காலடியில் சரணாகதியான ஜப்பான்..!! ஜி ஜின் பிங்குக்காக அமெரிக்காவை உதறிய துரோகம்..!!
சீனா அதிபர் ஜி ஜின்பிங் ஜப்பானுக்கு வருகைதரும் அளவுக்கு ஜப்பான் நல்ல சூழ்நிலைகளை உருவாக்கும் என்று பெய்ஜிங் நம்புகிறது எனவும் அவர் ஜப்பானை எச்சரித்தார்.
ஹாங்காங் பிரச்சனையில் அமெரிக்காவின் சீன எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஜப்பான் இணையாது என அந்நாடு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஹாங்காங் விவகாரத்தில் சீனாவை எதிர்க்கும் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிற நாடுகளின் முடிவிலிருந்து ஜப்பான் விலகிக் கொண்டதாக, அந்நாட்டின் செய்தி நிறுவனமான கியோடோ செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா விவகாரத்தை தொடர்ந்து அமெரிக்கா-சீனா இடையே பனிப்போர் தீவிரமடைந்துள்ளது. தென் சீனக் கடற்பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தால் ஜப்பான், தைவான், வியட்நாம், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதே போல் ஹாங்காங் தன்னுடைய காலனி நாடு என கூறி வரும் சீனா, அங்கு தேசிய பாதுகாப்பு என்ற கடுமையான சட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் அதற்கான தீர்மானமும் சீன நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சீனாவின் அத்துமீறல்களால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு நாடுகள் சீனாவுக்கு எதிராக ஒன்று திரண்டுள்ள நிலையில் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா ஹாங்காங் விவகாரத்தை மையப்படுத்தி எதிர்ப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து சீனாவை எதிர்த்து வந்தது. அதுமட்டுமின்றி ஜப்பான் மே-28 அன்று சீனாவை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கு சீனா ஒப்புதல் அளித்திருப்பது மிகுந்த கவலை ஏற்படுத்துகிறது என்றும் சீனாவின் இந்த நடவடிக்கை ஹாங்காங்கின் சுயாட்சியையும், சுதந்திரத்தையும் பாதிக்கும் என்றும் எச்சரித்திருந்தது. அதேபோல் ஹாங்காங்கிற்கு எதிரான சீனாவின் தீர்மானத்திற்கு அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன், அமெரிக்க தலைமையிலான இந்த கூட்டறிக்கையை கடுமையாக விமர்சித்ததுடன், ஹாங்காங் சீனாவின் உள்விவகாரம், அதில் மற்ற நாடுகள் கருத்து கூறுவது தேவையற்றது என அவர் எச்சரித்தார், அதேபோல் சீனாவுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நடவடிக்கைகளிலிருந்து ஜப்பான் விலகி இருப்பது நல்லது எனவும், சீனா அதிபர் ஜி ஜின்பிங் ஜப்பானுக்கு வருகைதரும் அளவுக்கு ஜப்பான் நல்ல சூழ்நிலைகளை உருவாக்கும் என்று பெய்ஜிங் நம்புகிறது எனவும் அவர் ஜப்பானை எச்சரித்தார்.
ஏற்கனவே சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் வருகைக்காக ஜப்பான் காத்திருந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அது ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜி ஜின்பிங்கின் வருகையை ஜப்பான் எதிர்நோக்கி காத்துள்ளது, எனவே அமெரிக்காவுடன் இணைந்து சீனாவை பகைத்துக் கொள்வது பல்வேறு வகையில் தன்னை பாதிக்கும் என கருதும் ஜப்பான், ஹாங்காங் விவகாரத்தில் சீனாவை எதிர்க்கும் நடவடிக்கையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள ஜப்பான் செய்தி நிறுவனமான கியோடோ, ஹாங்காங் பிரச்சினையில் (சீன எதிர்ப்பு பிரச்சாரத்தில்) ஜப்பான் சேராது, தேசிய பாதுகாப்பு சட்டம் தொடர்பாக சீனாவுக்கு எதிராக அவதூறான அறிக்கைகளை வெளியிடும் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிற நாடுகளின் முடிவிலிருந்து ஜப்பான் தன்னை விலக்கிக் கொள்கிறது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் ஜப்பான் உயர்மட்ட அதிகாரிகள் தங்கள் நிலைப்பாட்டை சீனாவுக்கு தொலைபேசி வாயிலாக தெரிவித்திருப்பதாகவும் அந்த நாளேடு தெரிவித்துள்ளது.