இத்தாலியில், தனது தாய் இறந்ததை மறைத்து, அவர் போல பெண் வேடமிட்டு சுமார் 80 லட்சம் ரூபாய் ஓய்வூதியத்தை மகன் ஒருவர் மோசடி செய்துள்ளார். தாயின் உடலை வீட்டிலேயே பதப்படுத்தி வைத்திருந்த அவர், அடையாள அட்டை புதுப்பிக்கச் சென்றபோது பிடிபட்டார்.

இத்தாலி நாட்டில் உள்ள போர்கோ விர்ஜிலியோ நகரில், அதிர்ச்சியூட்டும் மோசடி சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது தாயார் இறந்த பிறகும், அவர் போல பெண் வேடமிட்டு, சுமார் 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஓய்வூதியத் தொகையை மோசடி செய்து வந்த மகனைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

தாயின் உடலை மறைத்து வைத்த மகன்

56 வயதான அந்த நபரின் தாயார், கிராசியெல்லா டால்ஓக்லியோ (Graziella Dall'Oglio), கடந்த 2022-ஆம் ஆண்டு தனது 82-வது வயதில் மரணம் அடைந்தார்.

ஆனால், தாயின் ஓய்வூதியத் தொகையைத் தொடர்ந்து பெற வேண்டும் என்ற எண்ணத்தில், அந்த மகன் தனது தாயின் மரணத்தை அரசுக்குத் தெரிவிக்காமல் மறைத்துவிட்டார். மேலும், தாயின் உடலை ரசாயனங்கள் மூலம் பதப்படுத்தி (embalmed), அதை வீட்டிலேயே மறைத்து வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெண் வேடமிட்டு ஓய்வூதியம் பெற்ற மோசடி

அதன் பிறகு, அந்த நபர் தனது தாயைப் போலவே பெண் வேடமிட்டு அரசு அலுவலகங்களுக்குச் சென்று ஓய்வூதியத் தொகையைத் தொடர்ந்து பெற்று வந்துள்ளார்.

இந்தச் சூழலில், கிராசியெல்லாவின் அடையாள அட்டையைப் புதுப்பிக்க அந்த நபர் பெண் வேடத்தில் அரசு அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஊழியர் ஒருவருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

"85 வயதுடைய மூதாட்டியைப் போல அந்த நபரின் கைகளில் உள்ள தோல் சுருக்கங்கள் இல்லை; தோற்றமும் விசித்திரமாக இருந்தது" என்பதை அந்த ஊழியர் கவனித்துள்ளார். உடனடியாக அவர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார்.

போலீசார் விரைந்து வந்து விசாரித்தபோது, ரூ. 80 லட்சம் மதிப்புள்ள ஓய்வூதியத் தொகையை தாயைப் போல் வேடமிட்டு அவர் மோசடி செய்தது உறுதியானது.

இதையடுத்து போலீசார் அந்த நபரை உடனடியாகக் கைது செய்தனர். மேலும், வீட்டில் பதப்படுத்தி மறைத்து வைக்கப்பட்டிருந்த தாயின் உடலையும் மீட்டனர். இந்தச் சம்பவம் இத்தாலியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.