மேற்கு வங்கத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, சுமார் 40 ஆண்டுகளாகப் பிரிந்திருந்த ஒரு குடும்பத்தை மீண்டும் இணைத்துள்ளது. தம்பியின் தொலைபேசி எண்ணுக்கு, காணாமல் போன அண்ணனின் மகன் தொடர்பு கொண்டதன் மூலம் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

மேற்கு வங்கத்தில் தற்போது அரசியல் ரீதியாகப் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது. புருலியா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், சுமார் 40 ஆண்டுகளாகப் பிரிந்திருந்த ஒரு குடும்பத்தை SIR நடவடிக்கை ஒன்று சேர்த்துள்ளது.

சக்ரவர்த்தி குடும்பத்தினர் தங்கள் மூத்த மகன் விவேக் சக்ரவர்த்தியை மீண்டும் பார்ப்போம் என்ற நம்பிக்கையை முற்றிலுமாக இழந்திருந்தனர். 1988-ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறிய விவேக், எங்குச் சென்றார் என்ற தடயமே இல்லாமல் மறைந்து போனார். பல ஆண்டுகாலத் தேடலுக்குப் பிறகும் எந்தத் தகவலும் கிடைக்காததால், அந்தக் குடும்பம் சோகத்தில் மூழ்கியிருந்தது.

ஆனால், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி இவர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளித்தது.

திருப்பம் ஏற்படுத்திய தொலைபேசி எண்

விவேக்கின் இளைய சகோதரர் பிரதீப் சக்ரவர்த்தி, அந்தப் பகுதியின் வாக்குச்சாவடி நிலை அதிகாரியாக (BLO) பணியாற்றுகிறார். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்காக விநியோகிக்கப்பட்ட படிவங்களில், அதிகாரியான பிரதீப்பின் பெயர் மற்றும் அலைபேசி எண் அச்சிடப்பட்டிருந்தது. இதுவே அந்தத் திருப்புமுனைக்குக் காரணமாக அமைந்தது.

கொல்கத்தாவில் வசித்து வரும் விவேக்கின் மகன், தனது தந்தைவழி உறவுமுறை தெரியாமலேயே, ஆவணங்கள் தொடர்பான சந்தேகத்தைக் கேட்பதற்காக அந்த எண்ணுக்குத் தொடர்பு கொண்டார். அலுவல் ரீதியாகத் தொடங்கிய அந்த உரையாடல், மெல்ல மெல்லத் தனிப்பட்ட விவரங்களை நோக்கி நகர்ந்தது.

இதுகுறித்துத் தம்பி பிரதீப் கூறுகையில், "என் அண்ணன் 1988-ல் கடைசியாக வீட்டுக்கு வந்தார். அதன் பிறகு அவர் காணாமல் போய்விட்டார். ஆனால், அந்தச் சிறுவன் (விவேக்கின் மகன்) தொலைபேசியில் கூறிய பதில்கள் எங்கள் குடும்பத்திற்கு மட்டுமே தெரிந்த விஷயங்களாக இருந்தன. அப்போதுதான் நான் பேசுவது என் சொந்த அண்ணன் மகனிடம் என்பதை உணர்ந்தேன்," என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

37 ஆண்டுகளுக்குப் பிறகு

உண்மையைத் தெரிந்துகொண்டதும் இரு தரப்பும் உணர்ச்சிவசப்பட்டன. 37 ஆண்டுகால மவுனத்திற்குப் பிறகு, பிரதீப் தனது அண்ணன் விவேக்கிடம் பேசினார். நீண்ட காலப் பிரிவு முடிவுக்கு வந்தது.

இதுகுறித்து விவேக் கூறுகையில், "இந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. 37 நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு நான் என் வீட்டுக்குத் திரும்புகிறேன். நான் அனைவரிடமும் பேசினேன். தேர்தல் ஆணையத்தின் இந்த SIR நடைமுறை இல்லாவிட்டால், இந்தச் சந்திப்பு ஒருபோதும் நடந்திருக்காது. அவர்களுக்கு என் நன்றிகள்," என்று கண்ணீர்மல்கத் தெரிவித்தார்.

அரசியல் களத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து விவாதங்கள் நடந்து வரும் வேளையில், கோபோராண்டா கிராமத்தில் நடந்த இந்த நெகிழ்ச்சியான சம்பவம், அரசாங்கத்தின் ஒரு சாதாரண நடைமுறை எப்படிக் காயம்பட்ட ஒரு குடும்பத்தை மீண்டும் இணைக்கும் மருந்தாக மாறியது என்பதை உணர்த்துகிறது.