அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் ஈரானுடனான போர் நிறுத்த உடன்பாட்டை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளதாக நெதன்யாகு அறிவித்துள்ளார். ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டுவந்ததாகவும், டிரம்பிற்கு நன்றி தெரிவித்தார்.
அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் ஈரானுடனான போர் நிறுத்த உடன்பாட்டை இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். ஈரானின் அணு ஆயுத மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டுவரும் தங்கள் இலக்கை அடைந்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.
"ஈரானிய அணுசக்தி அச்சுறுத்தலை அகற்றுவதில் ஆதரவு அளித்ததற்கும், பங்களித்ததற்கும்" அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு நெதன்யாகு தனது நன்றியைத் தெரிவித்தார்.
12 நாள் போர் நிறைவு:
இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே 12 நாள் போரை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், ட்ரம்ப் போர் நிறுத்த ஒப்பந்தத்தை உலகிற்கு அறிவித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு இஸ்ரேல் பிரதமரின் இந்த அறிக்கை வெளியானது. ஆரம்பத்தில், ஈரான் இந்த போர் நிறுத்தத்தை நிராகரித்தாலும், பின்னர் ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த 12 நாட்களாக மத்திய கிழக்கில் பதற்றத்தை ஏற்படுத்திய இஸ்ரேல்-ஈரான் மோதலுக்கு இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் முற்றுப்புள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரானின் நிலைப்பாட்டில் குழப்பம்:
டிரம்பின் போர் நிறுத்த அறிவிப்புக்குப் பிறகு எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி, "தற்போது எந்தவிதமான போர் நிறுத்த ஒப்பந்தமோ அல்லது ராணுவ நடவடிக்கை நிறுத்தமோ இல்லை. இருப்பினும், டெஹ்ரானில் அதிகாலை 4 மணிக்குள் இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்தினால், அதற்குப் பிறகு எங்களது பதிலடியைத் தொடர நாங்கள் விரும்பவில்லை. எங்களது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும்" என்று குறிப்பிட்டார்.
இந்த ட்வீட்டை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே, டெஹ்ரான் நேரப்படி அதிகாலை 4 மணி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக ஒரு அறிக்கையைப் பகிர்ந்தார்.
"இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்காக எங்கள் சக்திவாய்ந்த ஆயுதப் படைகளின் ராணுவ நடவடிக்கைகள் கடைசி நிமிடம் வரை, அதாவது அதிகாலை 4 மணி வரை தொடர்ந்தன… எதிரியின் எந்த தாக்குதலுக்கும் கடைசி நிமிடம் வரை பதிலளித்தோம்" என்று அராக்சி தனது பதிவில் கூறியுள்ளார்.
முதலில் போர் நிறுத்தத்தை மறுத்த ஈரான் அமைச்சர், பின்னர் அதனை ஏற்றுக்கொண்டது போல கருத்து தெரிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
