அட்லாண்டிக்  பெருங்கடலில் உருவான் இர்மா புயல்  கியூபாவை புரட்டி எடுத்துவிட்டு அடுத்து  புளோரிடா மாகாணத்தை தாக்க வெகு வேகமாக நகர்ந்து  வந்து கொண்டிருக்கிறது. புயல் அச்சத்தால் 55 லட்சி அமெரிக்கர்கள் புளோரிடா மாநிலத்தை விட்டு பதறி அடித்துக் கொண்டு வெளியேறிவருகின்றனர்.அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான  இர்மா புயல், கரீபியன் தீவுகளை சின்னாபின்னப்படுத்தியது. பல தீவுகள், முற்றிலுமாய் அழிந்து போய் விட்டன. மக்கள் வாழ்வதற்கு தகுதியற்ற நிலைக்கு அவை தள்ளப்பட்டுள்ளன. அங்கு சுமார் 20 பேர் இந்தப் புயல், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர்.மிகவும் வலுவான 5-வது எண் புயலான   இர்மா, நேற்று கியூபாவை பதம் பார்த்தது. இதனால் வட கிழக்கு கடலோர பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. கியூபா நாட்டில் சமீபத்திய பத்தாண்டுகளில் இப்படி ஒரு புயல் தாக்கி இருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.அங்கு அதிகபட்சமாக மணிக்கு 257 கி.மீ. வேகத்தில் கடுமையான சூறாவளி வீசியது. மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. கேமாகியூ, சீக்கோ டி அவிலா, சாங்க்டி ஸ்பிரிட்டஸ், வில்லா கிளாரா, மட்டன்ஜாஸ் மாகாணங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன.பல இடங்களில் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஆறுகளில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி பெருக்கெடுத்து ஓடுகின்றன.

தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த மக்கள் அங்கிருந்து வெளியேறி உயரமானதும், பாதுகாப்பானதுமான இடங்களுக்கு சென்று உள்ளனர்.
கியூபாவில் சுற்றுலா சென்றிருந்த ஏறத்தாழ 50 ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேறி விட்டனர். சுற்றுலா தலங்கள் வெறிச்சோடிக்கிடக்கின்றன.

இந்நிலையில் இர்மா  புயல் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இன்று இர்மா புயல் காரணமாக மிகப் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புளோரிடா மாகாணத்தில் 56 லட்சம் பேர் தங்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களை தேடிச்செல்லுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து லட்சக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

இர்மா புயல் புளோரிடா மாகாணத்தில் மட்டுமல்லாது, அமெரிக்காவின் பிற தென்கிழக்கு மாகாணங்களையும் தாக்கும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது. புளோரிடாவில் பல்லாயிரக்கணக்கில் இந்திய மக்கள் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புளோரிடாவில் ‘இர்மா’ புயல் ஏற்படுத்தப்போகும் பாதிப்பிலிருந்து இயல்பு நிலை திரும்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும், மீட்பு-நிவாரணப் பணிகளை கவனிப்பதற்கும் பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ராணுவத்தினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.