அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஈரான் நாட்டைச் சேர்ந்த ஆர்வலர் நர்ஜெஸ் மொஹம்மத் தேர்வு!!
ஈரானில் பெண்கள் அடக்குமுறைக்கு எதிராக, மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை மேம்படுத்துவதற்காக போராடிய ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்ஜெஸ் மொஹம்மத் 2023 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்ஜெஸ் மொஹம்மத்தை ராயல் ஸ்வீடிஷ் அகாடமி தேர்வு செய்துள்ளது.
கடந்த ஆண்டு, அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸ் மனித உரிமை வழக்கறிஞர் அலெஸ் பியாலியாட்ஸ்கி, ரஷ்ய மனித உரிமைகள் அமைப்பான மெமோரியல் மற்றும் உக்ரேனிய மனித உரிமைகள் அமைப்பான சிவில் லிபர்டீஸ் மையம் ஆகியவற்றுக்கு இணைந்து வழங்கப்பட்டது.
"2023 அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நர்ஜெஸ் மொஹம்மத் துணிச்சலான போராட்டத்திற்கு கிடைத்து இருக்கும் வெகுமதி. ஈரான் ஆட்சியாளர்கள் அவரை 13 முறை கைது செய்தனர். ஐந்து முறை குற்றம்சாட்டினர். மேலும் அவருக்கு மொத்தம் 31 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தனர். 154 கசையடி கொடுத்தனர். இன்னும் அவர் சிறையில் தான் இருக்கிறார்'' என்று நோபல் பரிசு கமிட்டி அவரை தேர்வு செய்வதற்கான காரணத்தை தெரிவித்துள்ளது.
இலக்கியத்துக்கான நோபல் பரிசு நார்வே நாட்டைச் சேர்ந்த ஜான் ஃபோர்ஸ்க்கு அறிவிப்பு
இஸ்லாமியக் குடியரசில் உள்ள முக்கியமான பிரச்னைகளுக்காக மொஹம்மத் பிரச்சாரம் செய்தார். மதகுரு முறையை எதிர்த்தார் மற்றும் கட்டாய ஹிஜாபிற்கு எதிராக குரல் எழுப்பினார். சிறையில் இருந்தபோதும் அவர் பிரச்சாரத்தை கைவிடவில்லை.
ஈரானின் வடமேற்கில் உள்ள ஜன்ஜான் என்ற இடத்தில் 1972-ல் பிறந்தார். கல்லூரியில் இயற்பியல் படித்து பொறியியலாளர் ஆனார். ஆனால் விரைவில் பத்திரிகை துறைக்கு மாறினார். சீர்திருத்த இயக்கத்துடன் தொடர்புடைய செய்தித்தாள்களுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொண்டார்.
அவர் 2003-ல் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற ஈரான் வழக்கறிஞர் ஷிரின் எபாடியால் நிறுவப்பட்ட மனித உரிமைகள் பாதுகாவலர்களுக்கான மையத்தில் சேர்ந்தார். மரண தண்டனையை ஒழிப்பதற்காகப் போராடி வந்தார்.
வேதியியல் நோபல் பரிசு 2023: குவாண்டம் புள்ளிகளைக் கண்டுபிடித்த 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு
கடந்த ஆண்டு ஈரானில் மஹ்சா அமினி அறநெறி போலீசாரால் இறந்தார். இதற்கு நாடு முழுவதும் பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியது. ஆர்ப்பாட்டக்காரர்கள் "பெண் - வாழ்க்கை - சுதந்திரம்" என்பதை வலியுறுத்தினர். இந்தப் போராட்டத்தின் மூலமும் மொஹம்மத் பெயர் வெளியே தெரிய வந்தது. ஜனநாயகம் வீழ்ச்சியடைந்து வருவதாக சொந்த நாட்டின் குடிமக்கள் எச்சரிப்பதை ஈரான் அரசாங்கம் கேட்க வேண்டும் என்றும் நோபல் கமிட்டி வலியுறுத்தி உள்ளது.
கோவிட்-19க்கு எதிராக பயனுள்ள mRNA தடுப்பூசிகளை உருவாக்குவதற்கு உதவிய கட்டலின் கரிகோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் ஆகியோருக்கு கூட்டாக மருத்துவ நோபல் பரிசு அக்டோபர் 2 ஆம் தேதி அறிவிக்கப்பட்டு இருந்தது.