வேதியியல் நோபல் பரிசு 2023: குவாண்டம் புள்ளிகளைக் கண்டுபிடித்த 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு

குவாண்டம் புள்ளிகளின் கண்டுபிடிப்பு மற்றும் தொகுப்புக்காக பங்களித்த மூன்று விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அளிக்கப்படுகிறது.

Nobel Prize in Chemistry 2023 awarded to Moungi G. Bawendi, Louis E. Brus and Alexei I. Ekimov sgb

2023ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு குவாண்டம் புள்ளிகளை கண்டுபிடித்து தொகுத்ததற்காக அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு கூட்டாக வழங்கப்படுகிறது. 

மவுங்கி ஜி. பவேண்டி (Moungi G. Bawendi), லூயிஸ் ஈ. புரூஸ் (Louis E. Brus) மற்றும் அலெக்ஸி ஐ. எகிமோவ் (Alexei I. Ekimov) ஆகிய மூவரும் 2023ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்குத் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். வேதியியலில் நோபல் பரிசு பெற்றவர்கள் மூவரும் நானோ உலகத்தை ஆராய்வதில் முன்னோடிகளாக இருந்துள்ளனர் என்றும் ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

1980களின் முற்பகுதியில், லூயிஸ் புரூஸ் மற்றும் அலெக்ஸி எகிமோவ் ஆகிய இருவரும் தங்களுடைய ஆய்வில் குவாண்டம் புள்ளிகளைக் உருவாக்குவதில் வெற்றி பெற்றனர். குவாண்டம் புள்ளிகள் என்பவை குவாண்டம் விளைவுகள் மற்றும் அவற்றின் குணாதிசயங்களை தீர்மானிக்கும் சிறிய நானோ துகள்களைக் குறிக்கும்.

மவுங்கி பாவெண்டி, 1993ஆம் ஆண்டில், குவாண்டம் புள்ளிகளை உற்பத்தி செய்யும் முறைகளில் புரட்சியை ஏற்படுத்தினார். அவற்றின் தரத்தை மிக உயர்ந்ததாக மாற்றினார். இன்றைய நானோ தொழில்நுட்பத்தில் இவர்களின் கண்டுபிடிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.

முன்னதாக திங்கட்கிழமை மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு ஹங்கேரியைச் சேர்ந்த கட்டாலின் கரிக்கோ மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ட்ரூ வெய்ஸ்மேன் ஆகிய இருவருக்கும் கூட்டாக அறிவிக்கப்பட்டது. கொரோனா தடுப்புக்கான எம்ஆர்என்ஏ (mRNA) தடுப்பூசியை உருவாக்கத்துக்காக இந்த விருது கொடுக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. எலெக்ட்ரான் ஆய்வுக் கருவிகளைக் கண்டுபிடித்த அமெரிக்காவைச் சேர்ந்த பியர் அகோஸ்டினி, ஜெர்மனியைச் சேர்ந்த பிரென்ஸ் கிரவுஸ் மற்றும் ஸ்வீடனைச் சேர்ந்த அன்னே எல் ஹூலியர் ஆகியோருக்கு இந்தப் பரிசைப் பெற்றுள்ளனர்.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு நாளை (அக்டோபர் 5ஆம் தேதி) அறிவிக்கப்பட உள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு அக்டோபர் 6ஆம் தேதியும், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அக்டோபர் 9ஆம் தேதியும் அறிவிக்கப்பட உள்ளன. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் இருந்து அறிவிக்கப்படும்.

 
Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios