இலக்கியத்துக்கான நோபல் பரிசு நார்வே நாட்டைச் சேர்ந்த ஜான் ஃபோர்ஸ்க்கு அறிவிப்பு
1983ஆம் ஆண்டு வெளியான ஜான் ஃபோஸ் எழுதிய முதல் நாவல் 'சிவப்பு, கருப்பு' (Raudt, svart) தற்கொலையை கருப்பொருளாகக் கொண்ட உணர்ச்சிபூர்வமான படைப்பு.
இலக்கியத்துக்கான நோபல் பரிசு நார்வே எழுத்தாளர் ஜான் ஃபோஸுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கியத்துக்கான நோபல் பரிசு ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் உள்ள ஸ்வீடிஷ் அகாடமியால் வழங்கப்படுகிறது. 1895 இல் ஆல்பிரட் நோபலின் விருப்பப்படி நிறுவப்பட்ட ஐந்து நோபல் பரிசுகளில் இதுவும் ஒன்றாகும்.
குரலற்றவர்களின் குரலாக உள்ள அவரது புதுமையான நாடகங்கள் மற்றும் உரைநடைக்காக இந்த நோபல் பரிசு அவருக்குக் கொடுக்கப்படுகிறது என ஸ்வீடிஸ் அகாடமி கூறியுள்ளது.
"நோர்வேஜியன் நைனார்ஸ்க் மொழியில் எழுதும் இவர் நாடகங்கள், நாவல்கள், கவிதைத் தொகுப்புகள், கட்டுரைகள், குழந்தைகளுக்கான புத்தகங்கள், மொழிபெயர்ப்புகள் என பல வகையான மகத்தான படைப்புகளைத் தந்திருக்கிறார். இன்று உலகில் மிகவும் பரவலாக அறியப்படும் நாடக ஆசிரியர்களில் ஒருவராக இருக்கும் இவர், தனது உரைநடைக்காகவும் பெரும் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்" என நோபல் பரிசு அறிக்கை கூறுகிறது.
வேதியியல் நோபல் பரிசு 2023: குவாண்டம் புள்ளிகளைக் கண்டுபிடித்த 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு
64 வயதாகும் ஜான் ஃபோஸ் எழுதிய முதல் நாவலான 'சிவப்பு, கருப்பு' (Raudt, svart) 1983ஆம் ஆண்டு வெளியானது. உணர்ச்சிபூர்வமான அந்த நாவல் தற்கொலையை கருப்பொருளாகக் கொண்டது. பல வழிகளில், அவரது பிற்கால படைப்புகளுக்கு முன்னோடியாக அமைந்தது எனவும் நோபல் பரிசு அறிக்கை கூறியது.
புகழ்பெற்ற நாடக ஆசிரியர் ஹென்றிக் இப்சனுக்குப் பிறகு நார்வே நாட்டில் அதிக முறை அரங்கேற்றப்பட்ட நாடகங்கள் இவருடையவை. 2022ஆம் ஆண்டில் இவரது A New Name: Septology VI-VII என்ற நாவல் புக்கர் பரிசுக்கான இறுதிப்பட்டியலில் இடம்பெற்றிருந்தது. சொந்தப் படைப்புகள் மட்டுமின்றி, 2011ஆம் ஆண்டில் பைபிளையும் தனது நார்வே பாஷையில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார்.
முன்னதாக திங்கட்கிழமை முதல் 2023ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல், வேதியியல் ஆகியவற்றைத் தொடர்ந்து இலக்கியத்துக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை பெரிதும் எதிர்பார்க்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது. பின்னர், அக்டோபர் 9ஆம் தேதி பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படும்.
இயற்பியல் நோபல் பரிசு 2023: எலெக்ட்ரான் ஆய்வுக் கருவிகளைக் கண்டுபிடித்த 3 பேருக்கு அறிவிப்பு