ஈரானுக்கு சொந்தமான கச்சா எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏவுகணை தாக்குதலை அடுத்து நடுக்கடலில் எண்ணெய் கப்பல் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது. 

சவுதி அரேபியாவில் உள்ள அப்கய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் அண்மையில் ஏமன் கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதால் சவுதியில் உள்ள அந்த ஆலையில் ஏறக்குறைய 50 சதவீத எண்ணெய் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது. 

இதனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 10 சதவீதம் அதிகரித்தது. பல நாட்களாக கச்சா எண்ணெய் விலை உச்சத்தில் இருந்தது. நீண்ட போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டு நிலைமை சீரானது.

இந்நிலையில், சவுதி அரேபியா அருகே செங்கடல் பகுதியில் சென்ற ஈரான் நாட்டுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் மீது அடுத்தடுத்து இரண்டு முறை ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. சவுதி அரேபிய ராணுவம் இந்த தாக்குதலை நடத்தியதாக ஈரான் புகார் தெரிவித்துள்ளது. ஆனால், இதுதொடர்பாக சவுதி அரேபியா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த தாக்குதல் எதிரொலியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்காவுக்கும்- ஈரானுக்கும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் மீண்டும் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.