இஸ்ரேல்-ஈரான் இடையே நேரடி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இருதரப்பிலும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பொதுமக்கள் உடனடியாக டெஹ்ரானில் இருந்து வெளியேறுங்கள் என தெரிவித்துள்ளார். ஈரானின் அணுசக்தி திட்டம் ஆபத்தானது. அது இஸ்ரேலுக்கு மட்டுமன்றி உலக நாடுகளுக்கும் அச்சுறுத்தலானது என்று கூறி, ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல்-ஈரான் இடையே 2025 ஜூன் 13 முதல் நேரடி மோதல் தீவிரமடைந்தது. இஸ்ரேல், "ஆபரேஷன் ரைசிங் லயன்" என்ற பெயரில் ஈரானின் அணு ஆயுத நிலையங்கள், ராணுவத் தளவாடங்கள் மற்றும் முக்கிய தளபதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் ஆயுதப்படைகள் தலைவர் முகமது பகேரி, துணை ராணுவப்படையான புரட்சிகர படைத்தளபதி உசேன் சலாமி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கொல்லப்பட்டனர். மேலும் விஞ்ஞானிகள் ஃபெரேடூன் அபாசி, மொஹம்மத் மெஹ்தி தெஹ்ராஞ்சி ஆகியோரும் உயிரிழந்தனர்.

இஸ்ரேல் - ஈரான் தாக்குதல்

இதற்கு பதிலடியாக ஈரான், இஸ்ரேலின் முக்கிய நகரங்களான டெல் அவிவ் உள்ளிட்ட பகுதிகளில் ஏவுகணைகளை ஏவியது. 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடங்கி 5-வது நாள் தொடங்கியுள்ள நிலையில், இஸ்ரேலில் பலி எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது. தாக்குதல் சம்பவம் அதிரித்து வரும்நிலையில் இரு நாடுகளிலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலால் பல இடங்கள் கடும் புகை மண்டலமாக காட்சியளித்து வருகின்றன. இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 224ஆக உயர்ந்துள்ளது பலர் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை

இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், ஈரானில் ராணுவ தொழிற்சாலைகள் அருகில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் ராணுவம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் அனைவரும் உடனடியாக டெஹ்ரானில் இருந்து வெளியேற வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.

டெஹ்ரானில் இருந்து வெளியேறுங்கள்

இதுதொடர்பாக அவர் சமூக ஊடக தளமான Truth Socialஇல்: ஈரான் நான் கையெழுத்திடச் சொன்ன 'ஒப்பந்தத்தில்' கையெழுத்திட்டிருக்க வேண்டும். என்ன ஒரு அவமானம், மனித உயிரை வீணடிப்பது. சுருக்கமாகச் சொன்னால், ஈரானுக்கு ரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க அனுமதிக்க முடியாது. நான் அதை மீண்டும் மீண்டும் சொல்லிவிட்டேன். பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் உடனடி நடவடிக்கை எடுக்க டிரம்ப் வலியுறுத்தினார். குறிப்பாக அனைவரும் உடனடியாக டெஹ்ரானை காலி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆதரவாக அமெரிக்க அதிபர் டிரம்ப், டெஹ்ரானில் வசிப்பவர்களை வெளியேறுமாறு வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசு தொலைக்காட்சி ஊடக நிறுவனம் மீது தாக்குதல்

இதனிடையே ஈரான் நாட்டின் அரசு தொலைக்காட்சி ஊடக நிறுவனமான ஈரானின் இஸ்லாமிய குடியரசு நியூஸ் நெட்வொர்க் அலுவலகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலின்போது கட்டிடம் அதிர்ந்து கரும்புகை எழுந்தது, அந்த தொலைகாட்சி நிறுவனத்தின் ஸ்டூடியோவில் நேரலை நிகழ்ச்சியில் பதிவானது தொடர்பான விடியோ வைரலாகி வருகிறது.