இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேலில் 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. 47 பேர் காயம் அடைந்தனர்.

Iran Attacks On Israel Hospital: ஈரான் தங்களுக்கு எதிராக அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறி இஸ்ரேல் அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தியது. ஈரான் இதற்கு தக்க பதிலடி கொடுத்தது. இப்போது இரு நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்துள்ளது. ஏவுகணை, டிரோன்கள் மூலம் இஸ்ரேல் மீது ஈரான் கடும் தாக்குதலை தொடுத்தது. இஸ்ரேல் ஈரானின் எண்ணெய் வயல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் தீவிரம்

இரு தரப்புக்கும் இடையே இன்றும் மோதல் தீவிரமடைந்த நிலையில், இஸ்ரேலின் தெற்கில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையான சொரோகா மருத்துவ மையம் மீது ஈரான் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. இதில் குறைந்தது 47 பேர் காயமடைந்தனர் என்று மீட்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று அதிகாலை தெற்கு இஸ்ரேலில் உள்ள சொரோகா மருத்துவ மையத்தை ஈரானிய ஏவுகணை தாக்கியது, குறிப்பிடத்தக்க காயங்களையும் "பரவலான சேதத்தையும்" ஏற்படுத்தியது என்று இஸ்ரேலிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

இஸ்ரேல் மருத்துவமனை மீது தாக்குதல்

ஈரானின் தாக்குதலில் சொரோகா மருத்துவமனையின் கண்ணாடிகள் வெடித்து சிதறுவதும், அங்கு இருந்து ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் ஓடும் காட்சிகளும் வீடியோவில் பதிவாகி இருக்கின்றன. இஸ்ரேலின் அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' கணக்கால் பகிரப்பட்ட ஒரு கிளிப்பில், மருத்துவமனை ஊழியர்கள் புகை நிறைந்த தாழ்வாரங்கள் வழியாக ஓடுவதைக் காணலாம், அதே நேரத்தில் கண்ணாடித் துண்டுகள் தரைகளில் சிதறிக்கிடக்கின்றன. உடைந்த ஜன்னல்கள், உடைந்த பெஞ்சுகள் மற்றும் நாற்காலிகள் ஆகியவற்றின் குப்பைகள் அந்தப் பகுதி முழுவதும் சிதறிக்கிடக்கின்றன. தாக்குதலுக்குப் பிறகு மருத்துவமனை ஊழியர்களும் நோயாளிகளும் அழுது கூச்சலிடுவதை வீடியோ காட்டுகிறது.

பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்

''ஈரானிய ஆட்சி பீர்ஷெபாவில் உள்ள சொரோகா மருத்துவமனையை ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் குறிவைத்தது. ஒரு பெரிய மருத்துவ மையத்தைத் தாக்கியது. நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்.எங்கள் மக்களைப் பாதுகாக்க நாங்கள் தொடர்ந்து செய்ய வேண்டியதைச் செய்வோம்" என்று வெளியுறவு அமைச்சகத்தால் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ 'இஸ்ரேல் அரசு' கணக்கு வெளியிட்டது.

இஸ்ரேல் பிரதமர் கண்டனம்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "இன்று காலை 'ஈரானின் பயங்கரவாத கொடுங்கோலர்கள்' பீர்ஷெபாவில் உள்ள சொரோகா மருத்துவமனை மற்றும் மத்திய இஸ்ரேலில் உள்ள பொதுமக்கள் மீது ஏவுகணைகளை ஏவினர்" என்று கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சொரோகா மருத்துவமனையைத் தவிர, டெல் அவிவில் உள்ள ஒரு குடியிருப்பு உயரமான கட்டிடம் உட்பட பிற பகுதிகளையும் ஈரானிய ஏவுகணைகள் தாக்கின. டெல் அவிவ் மருத்துவமனை 16 காயமடைந்தவர்களை மீட்டதாகக் கூறியது, அவர்களில் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

பார்க்கிங் பகுதிக்கு செல்லும் வார்டுகள்

அசோசியேட்டட் பிரஸ் அறிக்கையின்படி, சொரோகா மருத்துவமனையில் 1,000 க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன மற்றும் நாட்டின் தெற்குப் பகுதியில் கிட்டத்தட்ட 1 மில்லியன் மக்களுக்கு சேவை செய்கின்றன. சொரோகா மருத்துவமனை மீதான தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் முழுவதும் உள்ள பல மருத்துவமனைகள் அவசரகால நெறிமுறைகளை கொண்டு வந்துள்ளன. நிலத்தடி பார்க்கிங் பகுதிகளை சிகிச்சை வார்டுகளாக மாற்றுவது மற்றும் பாதிக்கப்படக்கூடிய நோயாளிகளை, குறிப்பாக வென்டிலேட்டர்களில் உள்ளவர்களை - பாதுகாப்பிற்காக நிலத்தடிக்கு இடமாற்றம் செய்வது என அவசர பணிகளை மருத்துவமனைகள் மேற்கொண்டுள்ளன.

தெஹ்ரான் மீது குண்டு மழை

ஈரானின் அரக் கன நீர் அணு உலை மீது இஸ்ரேல் புதிய தாக்குதல்களை நடத்திய சில மணிநேரங்களுக்குப் பிறகு சொரோகா மருத்துமனை மீதான தாக்குதல் நடந்துள்ளது. மருத்துவமனை மீதான தாக்குதலாக கோபமடைந்த இஸ்ரேல், ஈரான் தெஹ்ரான் மீது குண்டு மழை பொழிந்தது. இஸ்ரேல் ஈரான் இடையே மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இரு நாடுகளை சேர்ந்த அப்பாவி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.