கிழக்கில் லடாக் பகுதியில் தவுலத்-பேக்-ஓல்டி மற்றும் டெபாசாங் பகுதியில் இந்திய ராணுவம் ஏராளமான படைகளை பாதுகாப்பு பணியில் நிறுத்தியுள்ளது. எந்த நேரத்திலும் சீனாவிற்கு பதிலளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கும்-சீனாவுக்கும் இடையே எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. கடந்த ஜூன்-15 ஆம் தேதி இந்திய எல்லைக்குள் அத்துமீறி  நுழைந்து சீன ராணுவத்தினர் நடத்திய வன்முறை தாக்குதலில், 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனை அடுத்து இரு நாடுகளும் மாறிமாறி படைகளை குவித்ததால் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்தது. 

அதேவேளையில் மற்றொருபுறம் இருநாட்டு ராணுவ தளபதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டதையடுத்து இருநாடுகளும் படைகளை பின்வாங்கி உள்ளன. இதனால் எல்லைகள் தற்காலிகமாக பதற்றம் முடிவுக்கு வந்துள்ளது. அதே நேரத்தில் கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சீனா படைகளை பின்வாங்கி உள்ள நிலையில்,  பாங்கொங் த்சோ ஏரி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் படைகளை பின்வாங்கவில்லை. 

இதனால் இருநாடுகளுக்கும் இடையே சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தையில், உடனே சீனா சர்ச்சைக்குரிய அனைத்து பகுதிகளில் இருந்தும் படைகளை பின்வாங்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது. அதே நேரத்தில் சீனா, தவுலத்- பேக்- ஓல்டி (டிபிஒ) மற்றும் டெபாசாங் சமவெளிகளில் 17000 துருப்புகளை நிலை நிறுத்தியுள்ளது. இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்தப் பகுதிகளில் இந்தியா அதிக எண்ணிக்கையில் ராணுவ துருப்புகளை அனுப்பி உள்ளது. இதுதவிர சீன ராணுவத்தின் எந்த ஒரு நடவடிக்கைக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் சுமார் 90 டாங்கிகள் கொண்ட படைப்பிரிவுகளை இந்தியா அந்த பகுதியில் நிலை நிறுத்தியுள்ளது. கரகொரம் பாஸுக்கு அருகில் உள்ள பெட்ரோலிங் பாயிண்ட் 1 முதல் டிஸ்பங்க் சமவெளி வரை இந்தியா படைகளை நிறுத்தி உள்ளது. சாலை மற்றும் விமான பாதை வழியாக முதற்கட்டமாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவான்கள் மற்றும் டேங்க் ரெஜிமென்ட்கள் இந்தப் பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. 

சில ஆதாரங்களின் படி சீனா, தனது டி.டபிள்யூ.டி பட்டாலியன் தலைமையகத்தை கரகொரம்-பாஸ் உடன் இணைக்கும் பகுதியில் ஒரு இணைப்பு சாலையை உருவாக்க திட்டமிட்டு வருகிறது இந்த முயற்சியை இந்தியா ஏற்கனவே தலையிட்டு தடுத்தது. எனவே சீனா அந்தப் பகுதியில் ராணுவத்தை குவித்து தொடர்ந்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது, ஒருவேளை சீனா தனது நோக்கத்தை நிறைவேற்றினால் அவர்களின் துருப்புகள் இப்பகுதியை அடைய சில மணி நேரங்கள் மட்டுமே ஆகும் எனவும், அது எல்லையில் நம் பாதுகாப்புக்கு உகந்ததாக இருக்காது எனவும் இந்தியா கருதுகிறது. ஆனால் தற்போது  ஜி-219 நெடுஞ்சாலை  வழியாக சீனா இந்த பகுதியை அடைய 15 மணி நேரம் ஆகிறது என்பது குறிப்பிடதக்கது.கடந்த காலங்களில் சீனா தனது படை பிரிவை பெட்ரோலிங் பாயிண்ட் 7 மற்றும் பெட்ரோலிங் பாயிண்ட் - 8 க்கு அருகில்  இந்திய பிரதேசத்தில் நிலைநிறுத்தியது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா அதை பின்னுக்கு தள்ளியது. 

இப்படி எல்லையில் பல்வேறு சிக்கல்கள் உள்ள நிலையில், குளிர்காலத்தில் எல்லையை கண்காணிக்க சுமார் 35 ஆயிரம் படைவீரர்களை இந்தியா நிலை நிறுத்தியுள்ளது. கடுமையான குளிர்காலத்தில் கூட ஒரு நீண்ட மோதலுக்கு இந்திய ராணுவம் முழுமையாக தயாராக உள்ளது. அங்குள்ள குளிர் மற்றும் நிலைமைகளை எதிர்த்துப் போராட ஏற்கனவே பயிற்சி பெற்ற 35 ஆயிரம் பேரை ராணுவம் அங்கு நிறுத்தியுள்ளது. இந்த ஜவான்கள் ஏற்கனவே அதிக உயரத்திலும், குளிர்கால சூழ்நிலையிலும் பயிற்சி பெற்றவர்கள் அவர். எந்தச் சூழ்நிலையையும் எதிர்த்துப் போராட அவர்கள் தயாராக உள்ளனர் என ராணுவம் தெரிவித்துள்ளது.