இந்திய சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசிகள் அரசு கொள்முதலால், நோய்த் தடுப்பு நடவடிக்கையின் மூலம் இந்திய மக்களுக்கு இலவசமாகவே கிடைக்குமென அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதர்  பூனவல்லா தெரிவித்துள்ளார். இவரின் இந்த கருத்து இந்தியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் அச்சுறுத்தி வருகிறது, கிட்டத்தட்ட இந்த வைரஸால் 210 க்கும் அதிகமான நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 50 லட்சத்தை தாண்டியுள்ளது. 6 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசால் உயிரிழந்துள்ளனர். தொடர் ஊரடங்கு மூலம் வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன. ஆனாலும் அந்த வைரஸ் தொற்றின் தாக்கும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒரு தடுப்பூசி வரும்வரை இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாது என ஒட்டுமொத்த மருத்துவ உலகமும் தடுப்பூசி எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன.

இதனால் உலக அளவில் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் தடுப்பூசி ஆராய்ச்சிகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட்  பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி ஆராய்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் அதன் ஆராய்ச்சி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுமார் 1,077 நபர்களுக்கு தாங்கள் உருவாக்கிய தடுப்பு ஊசியை செலுத்தியதில் அது அவர்களது உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை உருவாக்கியதாகவும், தாங்கள் உருவாக்கிய தடுப்பூசி தாங்கள் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக செயலாற்றியதாகவும் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டதில் புதுவகையான கில்லர் டி-செல்கள் உடலில் உருவானதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். டி-செல் என்பது ஆண்டுக்கணக்கில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை  உருவாக் கூடியதாகும். இதன் முதற்கட்டமாக 10 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய பிரிட்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்திடம் ஆர்டர் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் இந்திய சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசிகள் 50% அரசுக்கு வழங்கப்படுமென அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அதர் பூனவல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், தடுப்பூசி இறுதிக்கட்ட சோதனைகள் சிறப்பாக நடந்து முடிவுகள் சாதகமாக இருந்தால், ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்துடன் இணைந்து கொரோனா தடுப்பூசியை தங்கள் நிறுவனம் தயாரிக்கும் என  தெரிவித்துள்ளார். மேலும் அரசு  கொள்முதலால் நோய் தடுப்பு நடவடிக்கையின் மூலம் இந்திய மக்களுக்கு  இலவசமாகவே கிடைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். தடுப்பூசி தயாரிப்பில் முன்னணியில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மனித சோதனைகளை இந்தியாவில் நடத்த மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.