மெல்போர்ன் நகரில் மருந்து வாங்கச் சென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சவுரப் ஆனந்த் என்பவரை ஐந்து இளைஞர்கள் கும்பல் அரிவாளால் தாக்கியது. படுகாயமடைந்த அவரது கை கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் காப்பாற்றினர்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு வெளியே, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 33 வயதான சவுரப் ஆனந்த் என்பவரை ஒரு கும்பல் அரிவாளால் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த சவுரப் ஆனந்தின் கை கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சை மூலம் அவரது கையை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர் என ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மருந்து வாங்கச் சென்றபோது தாக்குதல்
கடந்த ஜூலை 19ஆம் தேதி மாலை சுமார் 7:30 மணியளவில், ஆல்டோனா மெடோஸ் சென்ட்ரல் ஸ்கொயர் ஷாப்பிங் சென்டரில் உள்ள மருந்தகத்தில் மருந்து வாங்கிக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, சவுரப் ஆனந்த்தை ஐந்து இளைஞர்கள் கும்பல் வழிமறித்து சரமாரியாக தாக்கியுள்ளது.
படுகாயம் அடைந்த சவுரப் ஆனந்த் ‘தி ஏஜ்’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில், "நான் ஒரு நண்பருடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது, ஏதோ ஒரு அசைவு தெரிந்தது. அதற்கு மேல் எதுவும் தெரியவில்லை. அடுத்த சில நொடிகளில் அவர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டனர்" என்று தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் தன் சட்டைப் பைகளில் இருந்தவற்றை நோண்டி எடுக்க முயன்றதாகவும் மற்றொருவர் தன் தலையில் தொடர்ந்து குத்திக்கொண்டே இருந்ததாகவும் சவுரவ் கூறுகிறார். ஒரு கட்டத்தில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்ததும், மூன்றாவது நபர் ஒரு அரிவாளை எடுத்து தனது தொண்டையில் வைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வெட்டப்பட்ட கை அறுவை சிகிச்சை மூலம் இணைப்பு
அவரது தோள் மற்றும் முதுகில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலில், கையில் எலும்புகள் முறிந்துள்ளதாவும் மூளையிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரத்த வெள்ளத்தில் கிடந்த சவுரப், எப்படியோ வணிக வளாகத்திலிருந்து வெளியேறி, அவ்வழியே சென்றவர்களிடம் உதவி கேட்டுள்ளார். அங்கு நின்றிருந்தவர்கள் உடனடியாக அவரை ராயல் மெல்போர்ன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல ஏற்பாடு செய்தனர். அங்கு மருத்துவர்கள் முதலில் அவரது இடது கையை துண்டிக்க நேரிடும் என்று கருதினர். ஆனால் பல மணிநேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அவரது மணிக்கட்டு மற்றும் கையில் ஸ்க்ரூக்கள் பொருத்தி, கையை மீண்டும் இணைத்துவிட்டனர் என தி ஆஸ்திரேலியா டுடே தெரிவித்துள்ளது.
இந்தக் கொடூரத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படும் நான்கு இளம் இளைஞர்களையும் ஆஸ்திரேலிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இன்னொரு நபரை தேடும் பணியும் தொடர்கிறது.
