மாஸ்கோ விமான நிலையத்தில் ஈரானிய சிறுவனை தரையில் அடித்த இளைஞர் கைது செய்யப்பட்டார். இதற்கு இனவெறி காரணமா? என விசாரணை நடந்து வருகிறது. 

Youth Threw Iranian Boy To The Ground at Moscow Airport: ரஷ்ய தலைநகர் மாஸ்கோ விமான நிலையத்தில் ஈரான் நாட்டை சேர்ந்த சிறுவன் ஒருவனை ஒரு நபர் தரையில் தூக்கி அடித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபரின் கொடூர செயலால் இரண்டு வயது சிறுவனுக்கு கடுமையான மண்டை ஓடு எலும்பு முறிவுகள் மற்றும் முதுகுத்தண்டு காயங்கள் ஏற்பட்டன. இப்போது கோமா நிலைக்கு சென்ற அந்த சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

சிறுவனை தரையில் அடித்த நபர்

இஸ்ரேல், ஈரான் இடையே போர் நடந்த நிலையில், அந்த சிறுவனின் குடும்பத்தினர் ரஷ்யா வந்தபோது இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோவில், மாஸ்கோ விமான நிலையத்தில் 2 வயதான அந்த சிறுவன் கையில் டிராலி பேக்கை வைத்துக் கொண்டு நிற்கிறான். அப்போது பக்கத்தில் நிற்கும் நபர் ஒருவர் யாராவது பார்க்கிறார்களா? என அக்கம் பக்கம் பார்த்து விட்டு திடீரென சிறுவனை தூக்கி தரையில் அடித்தார். உடனே சிறுவன் மூர்ச்சையற்ற நிலைக்கு செல்ல அவனை உடனடியாக ஒருவர் தூக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

இனவெறி காரணமா?

விமானம் வந்த பிறகு, சிறுவனின் கர்ப்பிணித் தாய் தனது தள்ளு நாற்காலியை எடுத்துக்கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது.இதனைத் தொடர்ந்து விமான நிலைய காவலர்கள் அந்த நபரை பிடித்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பெலாரஸைச் சேர்ந்த 31 வயதான விளாடிமிர் விட்கோவ் என தெரியவந்தது. குழந்தைக்கு எதிரான செயலுக்கு இனவெறி அல்லது வேறு ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். போதையில் விளாடிமிர் விட்கோவ் இந்த கொடூர செயலில் ஈடுபட்டதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இஸ்ரேல், ஈரான் போர்

ஈரான் தங்களுக்கு எதிராக அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறி இஸ்ரேல் அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தியது. ஈரான் இதற்கு பதிலடி கொடுக்க இரு தரப்புக்கும் இடையே மோதல் எழுந்தன. இரு தரப்பினரும் ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலம் தொடர்ந்து தாக்குதல் நடத்தினர். இதற்கிடையே இந்த போரில் அமெரிக்காவும் களமிறங்கி ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியது.

போர் நிறுத்தம் செய்வதாக அறிவிப்பு

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் தலையீட்டின் பேரில் இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்தன. இரு தரப்புக்கும் இடையே மோதல் தீவிரமான நிலையில், இஸ்ரேலும், ஈரானும் போரை நிறுத்தியதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்து இருந்தார். இஸ்ரேலில் தாக்குதலால் ஈரானில் இருந்த ஏராளமான மக்கள் பல்வேறு நாடுகளுக்கு தஞ்சம் புகுந்தது குறிப்பிடத்தக்கது.