எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய மீனவர்களுக்கு ‘கெடுபிடி’கள் அதிகரித்துள்ளன. அவர்களுக்கு இந்திய மீனவர்கள் அனுப்பிய பார்சல்களை வழங்காமல் அதிகாரிகள் திருப்பி அனுப்பி வைத்தனர்.
கராச்சி சிறைகளில்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 438 மீனவர்களும், டாமன் பகுதியை சேர்ந்த 51 மீனவர்களும் கைது செய்யப்பட்டு, பாகிஸ்தானில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களில் பெரும்பான்மையோர் கராச்சி நகரில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
உறவினர்கள் பார்சல்
அவர்களுக்கு, கடிதங்கள், டூத் பேஸ்ட், உலர் பழ வகைகள், துணிமணிகள், மருந்து மற்றும் பான் மசாலா போன்ற பொருட்கள் ெகாண்ட ‘பார்சல்’களை இந்தியாவில் உள்ள உறவினர்கள் அனுப்புவது வழக்கம்.
இந்தப் பார்சல்களை பெற்றுக்கொண்டு, உரிய பரிசோதனைக்குப் பின்பு, சிறை அதிகாரிகள் இந்திய மீனவர்களுக்கு அந்த பார்சல்களை இதுவரை வழங்கி வந்தனர்.
ஏற்க மறுப்பு
ஆனால், தற்போது உரி தாக்குதல் மற்றும் இந்திய ராணுவத்தின் பதிலடி ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில், தற்போது இந்தியாவில் இருந்து உறவினர்கள் அனுப்பி வைக்கும் இதுபோன்ற பார்சல்களை சிறை அதிகாரிகள் ஏற்க மறுத்து திருப்பி அனுப்பி வருகிறார்கள்.
டாமன் டையூ மீன்வளத் துறை அதிகாரியான ஷுகார் அஞ்சனி இந்த தகவலை நிருபர்களிடம் தெரிவித்தார்.
கராச்சி முத்திரை
டாமன் மட்டுமின்றி மற்ற இடங்களை சேர்ந்த இந்திய மீனவர்களும் இதே போன்றுதான் நடத்தப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.
அந்த பார்சல்களில் கராச்சி சிறை சிறைகளின் முத்திரை இருப்பதால், அவர்களுக்கு பார்சல்கள் கிடைத்தபின்தான் அவை திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்திய ராணுவ நடவடிக்கையே இதற்கு காரணம் என்று, டையூ கலெக்டர் பரிமள் ஜெயின் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
