இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தில் காலடி பதித்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
Shubhanshu Shukla Reaches International Space Station: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை 2027ம் ஆண்டு செயல்படுத்த உள்ளது. இதற்காக 4 பேர் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னோடியோக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா அனுப்பி வைக்கப்பட்டார்.
விண்வெளிக்கு பறந்த சுபான்ஷு சுக்லா
இஸ்ரோ, நாசாவின் கூட்டுத் திட்டமான 'ஆக்சியம் மிஷன் 4' திட்டத்தின் மூலம் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு பேர் அடங்கிய குழுவினர் நேற்று விண்வெளி பயணம் மேற்கொண்டனர். அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் 'பால்கன் 9' ராக்கெட் மூலம் 'டிராகன்' விண்கலம் விண்வெளிக்கு புறப்பட்டது.
28 மணி நேர பயணம்
நேற்று மதியம் இந்திய நேரப்படி 12.01 மணிக்கு அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட்ட'டிராகன்' விண்கலம் சுமார் 28 மணி நேரம் பயணம் செய்து பூமியில் இருந்து 400 கிமீ தொலைவில் இருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய நேரப்படி இன்று மாலை 3.58 மணியளவில் சென்றடைந்தது.
சர்வதேச விண்வெளி மையத்துக்குள் நுழைந்த சுபான்ஷு சுக்லா
இதனை தொடர்ந்து 'டிராகன்' விண்கலம் விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. இதன்பிறகு டிராகன் விண்கலத்தில் இருந்து இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தில் வெற்றிகரமாக காலடி எடுத்து வைத்தனர். அவருடன் 'டிராகன்' விண்கலத்தில் பயணித்த அமெரிக்காவின் பெக்கி விட்சன், போலந்தின் ஸ்லாவொஜ், ஹங்கேரியின் திபோர் கபு ஆகியோரும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் சென்றனர்.
வெற்றிகரமாக காலடி எடுத்து வைத்தனர்
டிராகன் விண்கலத்தை சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைப்பதும், பின்பு அதில் இருந்து இந்த 4 விண்வெளி வீரர்களும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்வதும் மிகவும் சவாலான பணியாகும். ஆனால் இந்த 4 பேரும் இந்த சவால்களை முறியடித்து வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் வெற்றிகரமாக காலடி எடுத்து வைத்தனர். இதற்கான பணிகள் தீவிரமாக நடந்தது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏற்கெனவே தங்கியிருக்கும் 7 பேர் அவர்களை உற்சாகமாக வரவேற்றனர். புதிதாக சென்ற 4 பேரையும் கட்டித்தழுவி வரவேற்றனர். மேலும் அவர்கள் 4 பேரையும் வரவேற்கும் விதமாக குளிர்பானம் கொடுத்தனர்.
வரலாற்று சாதனை படைத்த சுபான்ஷு சுக்லா
இதன் மூலம் சுமார் 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளி நிலையம் சென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை சுபான்ஷு சுக்லா வரலாறு படைத்துள்ளார். சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் அடங்கிய குழுவினர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 14 நாட்கள் தங்கி 60 ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர். சுபான்ஷு சுக்லா பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தில் பைலட்டாக சென்றுள்ளார். Ax-4 விண்வெளி பயணத்தை முன்னாள் நாசா விண்வெளி வீரர் பெக்கி விட்சன் வழிநடத்துவார், போலந்தைச் சேர்ந்த சவோஸ் உஸ்னான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கி மற்றும் ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு ஆகியோர் பணி நிபுணர்களாக இருப்பார்கள்.
யார் இந்த சுபான்ஷு சுக்லா?
1984 ஆம் ஆண்டில் விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியரான ராகேஷ் சர்மாவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, உலகளாவிய விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் வளர்ந்து வரும் பங்கை சுபான்ஷு சுக்லா பங்கேற்பு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்திய விமானப்படையில் நீண்ட அனுபவம் பெற்ற சுபான்ஷு சுக்லா, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர். 39 வயதான இவர் 2006ம் ஆண்டு இந்திய விமானப்படையில் பணியில் சேர்ந்தார். சுகோய்-30 எம்கேஐ, மிக்-21எஸ், மிக்-29எஸ், ஜாகுவார், ஹாக்ஸ் டோர்னியர்ஸ் மற்றும் என்-32ஆகிய போர் விமானங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர் சுபான்ஷு சுக்லா என்பது குறிப்பிடத்தக்கது.
