பெண்களை ஆயுதமாக்கி ஆதாயம் தேடும் பாகிஸ்தான்... கொதிக்கும் இந்தியா..!
ஜம்மு-காஷ்மீரில் அரசியல் லாபங்களுக்காக பெண்கள் உரிமை பிரச்சினைகளை ஆயுதமாக்கி ஆதாயம் தேடும் பாகிஸ்தானை இந்தியா கண்டித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொது சபையின் மூன்றாவது குழு அமர்வில் பெண்கள் முன்னேற்றம் தொடர்பான விவாதம் நடைபெற்றது. இதில் பல நாடுகளை சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றனர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய ஐ.நா.விற்கான பாகிஸ்தானின் நிரந்தர தூதர் மலீஹா லோதி, ஜம்மு-காஷ்மீரில் தகவல் தொடர்பு இல்லாத காரணத்தால் பெண்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் அவர் காஷ்மீரில் வாழும் ஒரு பெண், பாம்பு கடித்த தனது மகனை, உரிய மருத்துவ வசதிகள் இல்லாததால் இழந்தது குறித்த கட்டுரை தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளிவந்ததாக குறிப்பிட்டார்.
அதற்கு பதிலளித்த ஐ.நா.விற்கான இந்தியாவின் நிரந்தர தூதர் பவுலோமி திரிபாதி, ’பாகிஸ்தான் நாட்டின் பெயரை குறிப்பிடாமல், மற்றவர்களின் நிலப்பரப்பை அபகரிக்க விரும்பும் அந்த நாடு, போலியான கவலைகளால் தனது மோசமான நோக்கங்களை மறைக்கிறது. கவுரவம் என்ற பெயரில் பெண்களின் வாழ்வுரிமையை பறிக்கும் ஒரு நாடு, எனது நாட்டில் பெண்களின் உரிமைகள் குறித்து ஆதாரமற்ற அறிக்கைகளை வெளியிடுவது முரண்பாடாக இருக்கிறது. அரசியல் லாபங்களுக்காக பெண்கள் உரிமை பிரச்சினைகளை ஆயுதமாக பயன்படுத்துவது கண்டனத்திற்குரியது.
ஐ.நா.விற்கான முதல் பெண் தலைவர் விஜய லட்சுமி பண்டிட் முதல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறையைச் சேர்ந்த பெண் விஞ்ஞானிகள் வரை, இந்திய பெண்கள் நீண்ட காலமாக உத்வேகத்துடன் பணியாற்றி வருகின்றனர். பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் அதிகாரம் ஆகியவற்றிற்கு இந்திய அரசாங்கம் முக்கியத்துவம் அளித்து வருகிறது.
முன்னர் வங்கிக் கணக்குகளைத் திறக்கத் தகுதி பெறாத 19.7 கோடிக்கும் அதிகமான பெண்கள், இப்போது அரசாங்கத்தின் நிதி சேர்க்கும் முயற்சி மூலம் வங்கிக் கணக்குகளைக் வைத்துள்ளனர். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான கல்வி போன்ற நடவடிக்கைகளால் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை மேன்மையடைந்து உள்ளது”என்று கூறினார்.