இந்தியா-பாகிஸ்தான் மோதல் அமெரிக்காவின் பிரச்சினை இல்லை என அந்நாட்டின் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளார். இராஜதந்திரம் மூலம் பதற்றத்தைக் குறைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் மோதல் அமெரிக்காவின் பிரச்சினை அல்ல என்றும், இது அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் இல்லை என்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி வேன்ஸ் தெரிவித்துள்ளார். இரு தரப்பினரும் பதற்றத்தைக் குறைக்க அமெரிக்கா கேட்டுக்கொள்ளலாம் என்றாலும், மோதலில் தலையிட முடியாது என்று அவர் கூறினார்.
அந்நாட்டு செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்த வான்ஸ், "இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான மோதல் அடிப்படையில் அமெரிக்காவின் பிரச்சினை அல்ல. பதற்றத்தைக் குறைக்க இரு தரப்பினரையும் ஊக்குவிக்க முடியும். ஆனால், இதில் அமெரிக்கா தலையிடப் போவதில்லை," என்று அவர் கூறினார்.
இரு அணுசக்தி நாடுகளும் மோதிக்கொள்ளும் சாத்தியம் குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளதாகவும், அது நடக்காமல் தடுக்க பாடுபடுவதாகவும் வேன்ஸ் ஒப்புக்கொண்டார்.
அணுசக்தி நாடுகளின் மோதல்:
"அணுசக்தி நாடுகள் மோதிக்கொள்ளும்போதெல்லாம் நாங்கள் கவலைப்படுகிறோம். இந்த மோதலை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். ஆனால், இந்த நாடுகளைக் கட்டுப்படுத்த முடியாது," என்று அவர் தெரிவித்தார்.
"இந்தியர்களையோ அல்லது பாகிஸ்தானியர்களையோ ஆயுதங்களைக் கீழே போடச் சொல்ல அமெரிக்காவால் முடியாது. எனவே, இராஜதந்திர வழிகள் மூலம் இந்த விஷயத்தைத் தொடர்ந்து நாங்கள் கவனிப்போம். இது ஒரு பரந்த பிராந்தியப் போராகவோ அணுசக்தி மோதலாகவோ மாறாது என்பதே எங்கள் நம்பிக்கை," எனவும் ஜே.டி. வான்ஸ் குறிப்பிட்டார்.
போர் ஏற்பட்டால் அது பேரழிவை ஏற்படுத்தும் என்றும், இரு நாடுகளும் நிதானமாகச் செயல்பட வேண்டும் என்றும் வேன்ஸ் வலியுறுத்தினார்.
அமெரிக்காவின் முயற்சி:
இதற்கிடையில், வியாழக்கிழமை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ இருதரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
நிலைமை மேலும் மோசமடையாமல் இருப்பதை உறுதி செய்வதே மார்கோ ரூபியோவின் முதன்மை நோக்கம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய புரூஸ், அமைதியை ஏற்படுத்துவதற்காக அமெரிக்கா இரு நாடுகளுடனும் தீவிரமாக முயற்சி செய்து வருவதாகக் கூறினார்.


