இந்தியா - பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் நேரடி பேச்சுவார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

காஷ்மீரில் புல்வாமாவில் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு ஜெய்ஷ்–இ–முகமது நடத்திய தாக்குலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 44 பேர் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக,

அந்நாட்டில் செயல்பட்டுவரும்   தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் தாக்குதல் நடத்தின. இந்திய எல்லைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் நேற்று முயன்றன. ஆனால் அவற்றை இந்திய வீரர்கள் சுட்டு வீழ்த்தியும், விரட்டியடித்தனர். இதனால் இரு நாட்டு எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் பதற்றத்தை தணிக்குமாறு சர்வதேச நாடுகள் இந்தியா-பாகிஸ்தானை வலியுறுத்திவருகின்றன. இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர்களை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தொலைபேசியில் தொடர்புகொண்டார். அப்போது போர் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு இரு அமைச்சர்களிடமும் கேட்டுக்கொண்டார். 

இதனைத் தொடர்ந்து அறிக்கை ஒன்றையும் மைக் பாம்பியோ வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ‘இந்தியாவின் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையை குறித்து அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் பேசினேன். இந்தப் பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பை பராமரிக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டுக்கொண்டேன். 

மேலும் இந்தியாவுடன் அமெரிக்காவுடன் நெருங்கிய பாதுகாப்பு ஒத்துழைப்பையும் வலியுறுத்தினேன்.
இதைப்போல பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மக்முத் குரேஷியிடமும் பேசினேன்.

இந்தியாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, அங்கு தற்போது நிலவி வரும் பதற்றத்தை தணிக்க முன்னுரிமை அளிக்குமாறு கேட்டுக்கொண்டேன். மேலும் பாகிஸ்தான் மண்ணில் இயங்கி வரும் தீவிரவாதிகளுக்கு எதிராக அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தினேன்.

இரு தரப்பும் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் நேரடி பேச்சுவார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.’ என்று பாம்பியோ தெரிவித்துள்ளார்.