இந்தியா மீது அதிரடி தாக்‍குதல் நடத்தும் வகையில், பாகிஸ்தானிடம் சுமார் 140 அணு ஆயுதங்கள் இருப்பதாகவும், அவை அனைத்தும் 10 இடங்களில் பாதுகாப்பாக வைக்‍கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்‍க விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர். சீனாவின் தொழில்நுட்பம் மற்றும் உதிரி பாகங்களைக்‍ கொண்டு இவை தயாரிக்‍கப்பட்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்‍க விஞ்ஞானிகள் குழு ஒன்று, பாகிஸ்தானை படம்பிடித்து அனுப்பிய செயற்கைக்‍கோளின் படங்களை ஆய்வுசெய்து அறிக்‍கை வெளியிட்டுள்ளது. அதன்படி, பாகிஸ்தானிடம் 130 முதல் 140 வரையிலான அணு ஆயுதங்கள் இருப்பதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

அமெரிக்‍காவின் நிபந்தனையை மீறி, அணு ஆயுதங்களை பயன்படுத்தும் வகையில் F-16 ரக ஜெட் போர் விமானங்களை மாற்றியமைத்துள்ளதாகவும், வானில் இருந்து Raad நாசகாரி ஏவுகணையை செலுத்தும் வகையில் ஃபிரான்ஸ் நாட்டின் தயாரிப்பான Mirage ரக விமானங்களை வடிவமைத்துக்‍ கொண்டுள்ளதாகவும் அறிக்‍கையில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

இந்த விமானங்களில் அணு ஆயுதங்களையும், ஏவுகணையையும் இணைப்பதற்கு பயன்படும் சாதனங்கள் கராச்சி நகருக்‍கு மேற்கே அமைந்துள்ள Masroor விமான தளத்தில், பூமிக்‍கு அடியில் பாதுகாப்பாக மறைத்து வைக்‍கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

சிந்து மாகாணத்தில் உள்ள Akro, Pano Aqil, பஞ்சாப் மாகாணத்தில் Gujranwala, பலுசிஸ்தான் மாகாணத்தில் Khuzdar மற்றும் Sargodha ஆகிய இடங்களில் உள்ள ராணுவப் பாசறைகள், அணு ஆயுதங்களை பயன்படுத்தும் வகையில் தயார் நிலையில் வைக்‍கப்பட்டுள்ளதாகவும், Bahawalpur என்ற இடத்தில் 6-வது தளம் அணு ஆயுதம் பயன்படுத்தும் முறையில் உருவாக்‍கப்பட்டு வருவதாகவும் அறிக்‍கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

100 கிலோமீட்டர் தூரத்திற்கும் குறைவான தொலைவில் உள்ள இலக்‍கையும் தாக்‍கப் பயன்படும் வாகனங்களும் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றின் மூலம், Shaheen-2 என்ற நடுத்தர தூர ஏவுகணை மற்றும் Babur என்ற தரை இலக்‍கை தாக்‍கக்‍ கூடிய ஏவுகணை ஆகியவற்றை சுமந்து செல்லக்‍கூடிய ஏவு வாகனங்கள் பாகிஸ்தான் தேசிய மேம்பாட்டு வளாகத்தில் தயாரிக்‍கப்படுவதாகவும் அமெரிக்‍க விஞ்ஞானிகளின் அறிக்‍கையில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. 

அணு ஆயுதங்கள் அனைத்தும் 10 இடங்களில் பூமிக்‍கு அடியில் பாதுகாப்பாக மறைத்து வைக்‍கப்பட்டுள்ளதாகவும், இவற்றைத் தயாரிக்‍கத் தேவையான தொழில்நுட்பம் மற்றும் உதிரிபாகங்களை சீனா வழங்கியிருப்பதாகவும் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை தாக்‍கக்‍ கூடிய வகையில், இந்த அணு ஆயுதங்கள் வைக்‍கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்‍க விஞ்ஞானிகளின் அறிக்‍கை தெரிவிக்‍கிறது.