ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மற்றும் பல நகரங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. அந்த நாட்டின் மேற்கு பகுதியில் மோதல்கள் தீவிரமடைந்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானில் நடந்து வரும் போராட்டங்களுக்கு மத்தியில், அங்குள்ள நிலைமை தொடர்ந்து பதற்றமாக இருப்பதால், இந்தியர்கள் எச்சரிக்கையுடனும், பயணத்தில் கட்டுப்பாட்டுடனும் இருக்குமாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) வெளியிட்ட அறிக்கையில், 'சமீபத்திய நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு, மறு அறிவிப்பு வரும் வரை இந்தியர்கள் ஈரானுக்கு தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்' என்று கூறப்பட்டுள்ளது.
ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு எச்சரிக்கை
''தற்போது ஈரானில் உள்ள இந்திய குடிமக்கள் மற்றும் PIO-க்கள் உரிய எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், போராட்டங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் பகுதிகளைத் தவிர்க்க வேண்டும், மேலும் செய்திகளையும், தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்தின் இணையதளம் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களையும் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்.
குடியிருப்பு விசாக்களில் ஈரானில் வசிக்கும் இந்தியர்கள், ஏற்கனவே பதிவு செய்யவில்லை என்றால், இந்திய தூதரகத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஈரானில் வெடித்த போராட்டங்கள்
ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மற்றும் பல நகரங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. அந்த நாட்டின் மேற்கு பகுதியில் மோதல்கள் தீவிரமடைந்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டிசம்பர் பிற்பகுதியில் தொடங்கிய இந்த ஆர்ப்பாட்டங்கள், ஆரம்பத்தில் பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக கடைக்காரர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். பின்னர் போராட்டங்களின் அளவும் நோக்கமும் விரிவடைந்து, போராட்டக்காரர்கள் அரசியல் கோரிக்கைகளை எழுப்பியதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரான் கலவரத்தில் 14 பேர் பலி
ஈரானில் போராட்டங்கள் தொடங்கியதில் இருந்து பாதுகாப்புப் படையினர் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 'அரசாங்கம் உறுதியான மற்றும் நடைமுறைக்குரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால், மேலும் மோதல்கள் ஏற்படக்கூடும்" என்று அல் ஜசீரா தெரிவித்துள்ளது. தலைநகரின் கிழக்கில் நோவோபட் மற்றும் தெஹ்ரான் பார்ஸ்; மேற்கில் எக்டேபன், சதேகியே மற்றும் சத்தர்கான்; மற்றும் தெற்கில் நாஜியாபாத் மற்றும் அப்தோலாபாத் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
போராட்டங்களின் போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் "சர்வாதிகாரிக்கு மரணம்" போன்ற கோஷங்களை எழுப்பினர். இருப்பினும், கல் வீசுதல் மற்றும் குப்பைத் தொட்டிகளுக்கு தீ வைப்பதைத் தவிர வேறு பெரிய சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்று ஃபார்ஸ் கூறியது.


