உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அழிக்கும் திறன் இந்தியாவுக்கு உண்டு என உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரை 18,000-க்கும் மேற்பட்டோர்   உயிரிழந்துள்ளனர்.  தற்போது வரை 3 லட்சத்து 34 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர் உலக அளவில் வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில், ஆச்சரியம் என்னவென்றால் உலக அளவில் 67 நாட்களில் ஒரு லட்சம் பேருக்கு பரவி வரும் வைரஸ் அடுத்த 11 நாட்களில் மேலும் ஒரு லட்சம் பேருக்கு பரவியது. பின்னர் அடுத்த 4 நாட்களில் மேலும் ஒரு லட்சம் பேருக்கு பரவி 3 லட்சத்தை கடந்தது.

இந்தியாவைப் பொருத்தவரை 500--க்கும் மேற்பட்டோர்  வைரஸால் பாதிக்கப்பட்டு 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைப்பு தரப்பில் தகவல் தெரிவித்துள்ளது. இதில் தற்போதைய நிலவரப்படி 446 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 22 பேர் புதிதாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளாதாகவும் கூறப்பட்டுள்ளது.


 
 இந்நிலையில், இந்தியாவின் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் செயல் இயக்குனர்  மைக்கெல் ரியான்;- கொரோனா வைரஸை ஒழிக்கும் மிகப் பெரிய திறன் இந்தியாவுக்கு உண்டு என தெரிவித்துள்ளார். ஏற்கெனவே உலகை அச்சுறுத்திய சின்னம்மை மற்றும் போலியோ ஆகிய தொற்றுநோய்களை ஒழித்த இந்தியா, தற்போது கொரோனாவையும் கட்டுப்படுத்தி ஒழிக்கும் திறமையை கொண்டிருப்பதாக கூறியுள்ளார். மேலும், இதுபோன்ற தொற்றுநோய் ஒழிப்பில் ஏற்கெனவே இந்தியா உலகிற்கு தனது திறமையை நிரூபித்து காட்டியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.