பாகிஸ்தானின் பலூசிஸ்தானில், பலூச் விடுதலை முன்னணி (BLF) முதன்முறையாக ஜரீனா ரஃபிக் என்ற பெண் தற்கொலை பயங்கரவாதியைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஆறு பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில், பலூச் விடுதலை முன்னணி (Baloch Liberation Front - BLF) முதன்முறையாக ஒரு பெண் தற்கொலை பயங்கரவாதி மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. சாகாயில் பலத்த பாதுகாப்பு கொண்ட எல்லைப் படையின் வளாகத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மாலை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் ஆறு பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எனினும், பாகிஸ்தான் அரசு அதிகாரபூர்வமாக இந்த உயிரிழப்புகளை உறுதிப்படுத்தவில்லை.

பெண் தற்கொலை பயங்கரவாதி

இந்தத் தற்கொலைத் தாக்குதலை நடத்திய போராளியின் பெயர் ஜரீனா ரஃபிக் (Zareena Rafiq). இவர் ட்ராங் மஹூ (Trang Mahoo) என்ற பெயராலும் அறியப்படுகிறார்.

இவர் வளாகத்தின் வெளிப்புறத்தில் தன்னிடம் இருந்த குண்டை வெடிக்கச் செய்து, ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள் பிரதான வளாகத்திற்குள் ஊடுருவுவதற்கு வழி ஏற்படுத்தினார்.

பலூச் விடுதலை முன்னணி (BLF) நடத்தியுள்ள முதல் தற்கொலைத் தாக்குதல் இதுவாகும். பலுசிஸ்தானில் இதற்கு முன் இத்தகைய தாக்குதலை பலூச் விடுதலை இராணுவத்தின் (BLA) மஜீத் படை மட்டுமே நடந்தியிருக்கிறது.

சீன மற்றும் கனடிய நிறுவனங்களால் நடத்தப்படும் சைண்டாக் (Saindak) மற்றும் ரெகோ டிக் (Reko Diq) சுரங்கத் திட்டங்களுக்கு அருகில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. புவிசார் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த, அதிக சேதத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்தத் தாக்குதலை கிளர்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

தொடர் தாக்குதல்கள்

இதற்கிடையில், பலூச் விடுதலை இராணுவம் (BLA), நவம்பர் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் பல பிராந்தியங்களில் தாங்கள் நடத்திய தாக்குதல்களைப் பற்றி அறிவித்துள்ளது. மொத்தம் 29 தனித்தனித் தாக்குதல்களில் 27 பாகிஸ்தான் இராணுவப் பணியாளர்கள் கொல்லப்பட்டதாக அந்தக் குழு தெரிவித்துள்ளது. மேலும், தாங்கள் ஆயுதங்களைக் கைப்பற்றியதாகவும், நெடுஞ்சாலைகளின் சில பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாகவும் அறிவித்துள்ளது.