ஜெர்மனியில் சர்வாதிகார ஆட்சி நடத்திய நாசி ஆட்சியாளர் அடல்ப் ஹிட்லரின் மனைவி இவா பிரானின் உள்ளாடை(பேன்டீஸ்) ரூ. 2.50 லட்சத்துக்கு(3 ஆயிரம் பவுண்ட்) ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இது நிர்ணயிக்கப்பட்ட தொகையைக் காட்டிலும் 7 மடங்கு அதிகமாகும்.
சர்வாதிகாரி ஹிட்லரை காதல் திருமணம் செய்த, இவா பிரான், கடந்த 1945-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், நாஜி ஆட்சி முடிவுக்கு வந்தவுடன் சயனைடு மாத்திரைகளை விழுங்கி தற்கொலை செய்து கொண்டார். அப்போது இவர் பயன்படுத்திய உள்ளாடை இது என ஏலம் விடும் நிறுவனம் தெரிவித்தது.

இந்த ஏலத்தில் இவா பிரானின் உள்ளாடையுடன் சேர்ந்து, அவர் பயன்படுத்திய தங்க மோதிரம், வெள்ளியால் ஆன முகம்பார்க்கும் கண்ணாடிப் பெட்டி, சிவப்பு உதட்டுச்சாயம் என பொருட்கள் ஏலம் விடப்பட்டன.
லண்டனில் உள்ள வார்செஸ்டர்ஷையர் நகரில் உள்ள பிலிப் செரல் ஏல நிறுவனம் இந்த பொருட்களை தனியார் ஒருவரிடமிருந்து பெற்று ஏலம் இட்டது. இதில் இவா பிரானின் உள்ளாடையை மட்டும் 400 பவுண்ட்களுக்கு(ரூ.33 ஆயிரம்) விற்க திட்டமிட்டு இருந்தது. ஆனால், நிர்ணயிக்கப்பட்ட இலக்கு விலையைக் காட்டிலும், 7 மடங்கு அதிகரித்து, ரூ.2.50 லட்சத்துக்கு உள்ளாடை விற்பனையானது.

இதில் தங்க மோதிரம் 1250 பவுண்ட்களுக்கும்(ரூ.ஒரு லட்சம்), உதட்டுச்சாயம் 360பவுண்ட்களுக்கும் (ரூ.40 ஆயிரம்) ஏலம் எடுக்கப்பட்டது.
இது குறித்து பிலிப் செரல் ஏல நிறுவனத்தின் இயக்குநர் சோபி ஜோன்ஸ் கூறுகையில், “ பொதுவாக மக்கள் வரலாற்றின் மீது ஒரு ஈர்ப்பு வைத்துள்ளனர். அதனால்தான், பிரபலமானவர்களின் தனிப்பட்ட பொருட்களை அதிக ஏலத்தில் எடுக்க விரும்புகிறார்கள்'' எனத் தெரிவித்தார்.
