வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், ஷரியத்பூரில் கோகன் தாஸ் என்ற இந்து நபர் மீது கும்பல் ஒன்று பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளது. இது போன்ற பல கொலைவெறித் தாக்குதல்கள் நடந்துள்ளதாக இந்தியா கவலை தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீதான தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதன் உச்சகட்டமாக, 50 வயது மதிக்கத்தக்க இந்து நபர் ஒருவரை கும்பல் ஒன்று கொடூரமாகத் தாக்கி, அவர் மீது தீ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோரச் சம்பவம்
வங்கதேசத்தின் ஷரியத்பூர் (Shariatpur) மாவட்டத்தில் டிசம்பர் 31 அன்று மாலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்டவர் கோகன் தாஸ் (Khokon Das) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கோகன் தாஸ் தனது கடை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, ஆயுதங்களுடன் வந்த கும்பல் அவரை வழிமறித்துள்ளது. அவர்கள் அவரைத் தாக்கியதுடன், பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர்.
தீப்பற்றிய நிலையில், கோகன் தாஸ் அருகில் இருந்த குட்டையில் குதித்துத் தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டார். தற்போது அவர் பலத்த காயங்களுடன் டாக்கா மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொலைவெறித் தாக்குதல்கள்
வங்கதேசத்தில் கடந்த சில வாரங்களாகவே இந்துக்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டு வருகின்றனர். கோகன் தாஸ் மீதான இந்தத் தாக்குதலையும் சேர்த்து, கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் நான்கு இந்துக்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர்.
டிசம்பர் 18ஆம் தேதி மைமென்சிங் (Mymensingh) பகுதியில் தீபு சந்திர தாஸ் (25) என்ற இளைஞர், மத நிந்தனை செய்ததாகக் கூறி கும்பலால் கொல்லப்பட்டார். அவரது உடல் மரத்தில் கட்டித் தூக்கப்பட்டு எரிக்கப்பட்டது. பின், டிசம்பர் 24ல் ராஜ்பாரி (Rajbari) மாவட்டத்தில் அமிர்த் மொண்டல் (29) என்ற இளைஞர் மக்கள் கூட்டத்தால் அடித்துக் கொல்லப்பட்டார்.
இந்தியா கவலை
வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவியேற்ற பிறகு, சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் 2,900-க்கும் மேல் பதிவாகியுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், "வங்கதேசத்தில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் புத்த மதத்தினர் மீது கட்டவிழ்த்து விடப்படும் இடைவிடாத விரோதப்போக்கு மிகுந்த கவலை அளிக்கிறது. இது வெறும் ஊடக மிகைப்படுத்தலோ அல்லது அரசியல் வன்முறையோ அல்ல; உண்மையான பாதுகாப்பு அச்சுறுத்தல்" என்று சாடினார்.


