காலநிலை மாற்றம்: ஒரே நாளில் கொட்டித் தீர்த்த மழை - வளைகுடா நாடுகளுக்கு எச்சரிக்கை மணி!
காலநிலை மாற்றம் காரணமாக பெய்துள்ள வரலாறு காணாத மழை என வளைகுடா நாடுகளுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை மணி அடிக்கின்றனர்
வளைகுடா நாடுகள் வறண்ட வானிலைக்கு பெயர் போனவை. குறிப்பாக, துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் வெயில் சுட்டெரிக்கும் மழை என்பதை நாம் பார்க்க முடியாது. ஆனால், கடந்த சில நாட்களாக வளைகுடா நாடுகளில் கனமழை பெய்து வருகிறது. துபாயில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
துபாய் சர்வதேச விமான நிலைய வானிலை ஆய்வு மைய தரவுகளின்படி, கடந்த 15ஆம் தேதி மாலையில் மழை தொடங்கியது. நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு மழை தீவிரமடைந்து நாள் முழுவதும் கொட்டித்தீர்த்தது. இதனால் நேற்று முன்தினம் ஒரே நாளில் 142 மிமீ மழை பதிவாகி உள்ளது. துபாயின் ஓராண்டு சராசரி மழை அளவு வெறும் 94.7 மிமீ மட்டுமே என்ற நிலையில், ஒன்றரை ஆண்டுகளில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்ததாக ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அல் ஐன் நகரில் மட்டும் 24 மணி நேரத்தில் 254 மிமீ மழை பதிவாகியுள்ளது.
வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான, வானளாவிய கட்டடங்களுக்கு பெயர் போன, உலகின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான துபாயில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதும், கார்கள் முழ்கியிருந்த காட்சிகளும், உலகின் பரபரப்பான விமான நிலையமான துபாய் விமான நிலைய ஓடு பாதைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடி விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதும் உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மேகவிதைப்பு காரணமா?
ஐக்கிய அமீரகத்தை கனமழை தாக்கியதற்கு முன்பு, ஓமன், தென் கிழக்கு ஈரானை பெருமழை தாக்கியிருந்தது. பஹ்ரைன், ஓமன், கத்தார் மற்றும் சவுதி அரேபியாவிலும் மழை பெய்தது. அதன் தொடர்ச்சியாகவே, ஐக்கிய அரபு அமீரகத்தை மழை தாக்கியது. இதற்கு மேக விதைப்பு காரணமாக இருக்கலாம் என சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
பாலைவன பூமியான துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளில், கடும் வெப்பநிலையை தாக்குபிடிக்க அவ்வப்போது செயற்கை மழை வரவழைக்கப்படும். வானில் விமானங்களில் இருந்து சில ரசாயனங்கள் தூவப்பட்டு செயற்கை மழை வரவழைக்கப்படும். இது மேக விதைப்பு எனப்படுகிறது. குடிநீர் உற்பத்திக்கும், நிலத்தடி நீரை பெருக்கவும் அவ்வப்போது இவ்வாறு செயற்கை மழை வரவழைக்கப்படுகிறது. அரேபிய வளைகுடா பிராந்தியத்தில் Cloud Seeding எனப்படும் மேக விதைப்பை, ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையமே முதன்முதலாக பயன்படுத்தியது.
இந்த செயற்கையான மேகவிதைப்பு முறைதான் தற்போதைய கனமழைக்கு காரணம் என சிலர் வாதங்களை முன்வைக்கின்றனர். துபாய் கனமழைக்கு முன்பாக கடந்த 14ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் 6 முதல் 7 மேக விதைப்பு விமானங்கள் பறந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறு அதிகப்படியான மேக விதைப்பால்தான் ராட்சத மழை கொட்டியிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால், இது அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.
ஐக்கிய அரபு அமீரகம் / துபாய் மழைக்கும், மேக விதைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார். மேகவிதைப்பு செயல்முறை நடைமுறைக்கு முன்னரே பல உலக மாதிரிகள் இந்த தீவிர மழைக்கு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், இந்தியாவில் மேக விதைப்பு சோதனைகளுடன் தொடர்புடையவரும், ஐஐடி கான்பூர் சிவில் இன்ஜினியரிங் துறையைச் சேர்ந்த பேராசிரியர் சச்சிதா நந்த் கூறுகையில், மேகவிதைப்பு காரணமாக கனமழை பெய்திருக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். மேக வளர்ச்சியின் ஆரம்ப கட்டங்களில் செயற்கை விதைப்பு செய்யப்படுகிறது. ஆனால் புயல் நன்கு வளர்ந்திருந்தால், மேகவிதைப்பு பொதுவாக பரிந்துரைக்கப்படுவதில்லை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
காலநிலை மாற்றமும், அரேபிய தீபகற்ப புயலும்
அரேபிய தீபகற்ப பகுதியைக் கடந்து சென்ற மிகப் பெரிய புயலே இந்த பெருமழைக்குக் காரணம் என்கிறார்கள். மத்தியதரைக் கடலில் இருந்து ஒரு மத்திய அட்சரேகை மிகவும் வலுவாக இருந்தது. அது தெற்கு நோக்கி ஐக்கிய அரபு அமீரகத்தை நோக்கி நீண்டிருந்தது.
பொதுவாக, இது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், காஷ்மீர், இமாச்சல், உத்தரகாண்ட் மற்றும் திபெத்திற்கு நெருக்கமாக செல்லும். ஆனால், வழக்கத்துக்கு மாறாக, தெற்கே சென்றது. எனவே துபாயில் பெய்த மழைக்கு முன்னதாக ஓமன் மற்றும் அதை ஒட்டிய சவுதி அரேபியாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் கே.ஜே.ரமேஷ் தெரிவித்துள்ளார்.
அரபிக்கடலிலின் கூடுதல் ஈரப்பதத்தால் புயல் மேலும் வலுப்பெற்றது. இதனால், பஹ்ரைன் மற்றும் கத்தாரில் ஒரே நேரத்தில் அதிக மழைப்பொழிவு ஏற்பட்டது எனவும் நிபுணர்கள் கூறுகிறார்கள். மனிதர்களின் நடவடிக்கைகளால் வளிமண்டலத்தில் செலுத்தப்படும் அதிக அளவிலான பசுமை இல்ல உமிழ்வுகள், வெப்பநிலையை உயர்த்தி, ஏற்கனவே 1.1 டிகிரி செண்டிகிரேடுக்கு மேல் உலகை வெப்பமாக்கியுள்ளது.
“எவ்வாறாயினும், புவி வெப்பமடைதல் கடுமையான மழையை தீவிரப்படுத்தியுள்ளது என்பது உறுதியாக தெரிகிறது. ஒட்டுமொத்த மழை நாட்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், குறிப்பிட்ட நாட்களில் மழையின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம், வெப்பமான வளிமண்டலம், அதிக ஈரப்பதத்தைத் தக்கவைத்து, வலுவான, ஆழமான மேகங்களை நீண்ட காலத்திற்கு தக்கவைத்து, திடீர் மழைக்கு வழிவகுக்கும்.” என வளிமண்டல வல்லுநர்கள் கூறுகின்றனர்.
காலநிலை மாற்றம் ஏற்கனவே உலகளாவிய பிரச்சினையாக உள்ளது. அதனை தடுக்க உலக நாடுகள் முயற்சித்து வரும் நிலையில், காலநிலை மாற்றம் காரணமாக வரலாறு காணாத மழை வளைகுடா நாடுகளில் பெய்துள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை மணி அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.