Heavy forest fire in portugul... 60 persons were killed
போர்ச்சுகல் நாட்டில் வேகமாக பரவிவரும் காட்டுத்தீயால் 60 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 20 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் நகருக்கு தென் கிழக்கே 200 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள Pedrogao Grande மலைப் பகுதியில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது.
கடும் கோடை வெயில் மற்றும் வேகமாக வீசும் காற்று ஆகியவற்றின் காரணமாக இந்த காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது.
காட்டுத்தீ பரவுவது குறித்து தெரியாமல் வனப்பகுதியில் அமைந்துள்ள சாலை வழியே சென்ற வாகனங்களை நெருப்பு சூழ்ந்தது. இந்த விபத்தில் வாகனங்களில் பயணம் செய்த 60 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
காட்டுத்தீயை அணைப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ள தீயணைப்புத் துறையைச் சேர்ந்த 6 வீரர்கள் உட்பட 20 பேர் தீக்காயமடைந்ததால், அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
காட்டுத்தீயை அணைக்க தொடர்ந்து போராடி வருவதாக போர்ச்சுகல் உள்நாட்டு விவகாரத்துறை அமைச்சர் Jorge Gomes தெரிவித்தார்.
சம்பவ இடத்தைப் பார்வையிட்ட போர்ச்சுக்கல் பிரதமர் ஆன்டனியோ கோஸ்டா , துரதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்து, சமீப ஆண்டுகளால் நாங்கள் கண்டிராத ஒன்றாக அமைந்து விட்டது என தெரிவித்தார்.
தீ பரவி வந்தாலும் மக்களை காப்பாற்றுவதற்குத்தான் நாங்கள் முன்னுரிமை அளித்து வருகிறோம் என்று ஆன்டனியோ கோஸ்டா வேதனையுடன் தெரிவித்தார்.
