காசாவின் ஷிஃபா மருத்துவமனையில் 55 மீ., நீளமும், 10 ஆடி ஆழமும் கொண்ட சுரங்கப்பாதை: இஸ்ரேல் வீடியோ வெளியீடு!!
இஸ்ரேல் பாதுகாப்புப் படை மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு ஆணையம் இரண்டும் காசாவின் ஷிஃபா மருத்துவமனையில் 55 மீட்டர் நீளமும், 10 ஆடி ஆழமும் கொண்ட சுரங்கப்பாதையை கண்டறிந்துள்ளது.
இஸ்ரேலுக்கும், காசாவை கட்டுக்குள் வைத்துக் கொண்டிருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே ஏழு வாரங்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. முதலில் காசா பகுதியில் வான்வழி தாக்குதலில் ஈடுபட்ட இஸ்ரேல், பின்னர் தரைவழி தாக்குதலையும் நடத்தி வருகிறது. இதன் முக்கிய நோக்கமே ஹமாஸ் தீவிரவாதிகளின் சுரங்கப்பாதைகளை அழிக்க வேண்டும் என்பதுதான்.
இந்த நிலையில் இஸ்ரேல் பாதுகாப்புப் படை எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில், ''இஸ்ரேலியப் படைகள் நுழைவதைத் தடுக்கும் ஹமாஸின் முயற்சியில், சுரங்கப்பாதையின் நுழைவாயிலில் வெடிகுண்டை தடுக்கும் கதவு மற்றும் மறைந்திருந்து துப்பாக்கியால் சுடுவதற்கான துளைகள் போட்டுள்ளனர். இஸ்ரேல் படைகள் தங்களை எந்த வகையிலும் தாக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
காஸாவில் வசிப்பவர்களையும், ஷிஃபா மருத்துவமனை நோயாளிகளையும் மனிதக் கேடயங்களாக ஹமாஸ் பயன்படுத்தி வருகிறது என்பதை உலகிற்கு தொடர்ந்து நாங்கள் கூறி வந்தோம்.
கடந்த சனிக்கிழமை ஷிஃபா மருத்துவமனையில் இருந்தவர்களை ஒரு மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை கேட்டுக் கொள்ளவில்லை. இதற்கு மாறாக மருத்துவமனையில் இருப்பவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு உதவ வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக் கொண்டதை ஏற்றுக் கொண்டோம். மேலும் மருத்துவ உதவிகளை செய்வதற்கும் நாங்கள் ஒப்புக் கொண்டு இருந்தோம். எந்த வகையிலும் நோயாளிகளை உடனடியாக வெளியேற வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்ளவில்லை'' என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்தியாவை நோக்கி வந்த சரக்குக் கப்பல் ஏமன் அருகே கடத்தல்! ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அட்டூழியம்!
காசாவில் தொடர்ந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை தரைவழி தாக்குதலை நடத்தி வருகிறது. ஷிஃபா மருத்துவமனையில் இருக்கும் பகுதியில் குறிப்பிட்ட இடங்களை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. புலனாய்வு தகவலை வைத்து தாக்குதல் நடத்தி வருவதகாவும் தெரிவித்துள்ளனர்.
ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதல் குறித்து இஸ்ரேல் அதிபர் இசாக் ஹெர்சாக் கூறுகையில், காசா பகுதியில் இருக்கும் மருத்துவமனைகளில் இருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். காசா பகுதியில் இருக்கும் நோயாளிகள், மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் மீது எந்த தாக்குதலையும் இஸ்ரேல் நடத்தவில்லை என்று உறுதிபடுத்தியுள்ளார்.
ஒற்றுமையை வெளிக்காட்ட இஸ்ரேல் பெண்கள் மாஸ் யோகா நிகழ்ச்சி:
பாலஸ்தீனப் பகுதி முழுவதும் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவுக்கு ரகசிய சுரங்கங்கள், பதுங்கு குழிகள் தங்களிடம் உள்ளது என்பதை ஒப்புக் கொள்ளும் அதே வேளையில், இவை மருத்துவமனைகள் உள்கட்டமைப்பில் அமைந்துள்ளன என்று ஹமாஸ் கூறி வருகிறது.