இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் அபு ஒபெய்டா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி அறிவித்துள்ளார். இது ஹமாஸ் அமைப்புக்குப் பெரும் பின்னடைவாக இருக்கும். இஸ்ரேலின் காசா தாக்குதலில் 63000 க்கு மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.
கடந்த அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய கொடூரத் தாக்குதலுக்குப் பிறகு, 21 மாதங்களாக இஸ்ரேல் காசாவில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், காசாவில் 63 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சூழலில், ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் பிரிவின் செய்தி தொடர்பாளர் அபு ஒபெய்டா இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி இஸ்ரேல் கத்ஜ் இன்று அறிவித்துள்ளார்.
2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதில் ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணயக்கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர்.
பணயக்கைதிகளை மீட்கும் நோக்கில் இஸ்ரேல் காசாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தலைவர்கள் பலர் கொல்லப்பட்டனர். அதன் தலைவர் இஸ்மாயில் ஹனியேவும் இதில் அடங்குவார்.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், காசாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர்.
ஒபெய்டா மரணம்:
கடந்த வெள்ளிக்கிழமை, காசா நகரில் இஸ்ரேல் புதிய ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியபோது, ஒபெய்டா கடைசியாக ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி இஸ்ரேல் கத்ஜ், ஒபெய்டா கொல்லப்பட்டதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, "ஒபெய்டா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது உண்மைதான். ஆனால், அவர் கொல்லப்பட்டாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை" என்று அமைச்சரவை கூட்டத்தில் கூறியுள்ளார்.
ஹமாஸ் அமைப்பினர் இதுகுறித்து எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஒபெய்டாவின் மரணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை ஹமாஸ் அமைப்பு இன்னும் வெளியிடவில்லை. இது உறுதிப்படுத்தப்பட்டால், ஹமாஸ் அமைப்புக்கு இது ஒரு பெரிய அடியாக இருக்கும்.
