கரீபியன் நாடான ஹெய்தியை துவம்சம் செய்து 900 பேரை காவு வாங்கிய ‘மேத்யூ’ புயல், அமெரிக்காவின் புளோரிடாவை உலுக்கத் தொடங்கியுள்ளது. அங்கு இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மின்சாரம் இல்லாமல் இருளில் தத்தளித்து வருகின்றனர்.
240கி.மீ. வேகம்
கரீபியன் கடலில் உருவான சக்திவாய்ந்த புயலுக்கு ‘மேத்யூ’ என பெயரிடப்பட்டது. கரீபியன் கடலில் உருவான மேத்யூ புயல் அங்கிருந்து வடக்கு அட்லாண்டிக் கடல் வழியாக பகாமாஸ், கியூபா, ஹெய்திநாடுகளை தாக்கி ருத்ர தாண்டவம் ஆடியது. மணிக்கு 240 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய காற்று, பலத்த மழையால் ஹெய்தியில் இதுவரை 900 பேர் பலியாகியுள்ளனர், 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வீடுகளை இழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசர நிலை
ஹெய்தியில் தாண்டவமாடிய மேத்யூ புயல், வடக்கு அட்லாண்டிக் கடல் வழியாக அமெரிக்காவின் புளோரிடா, சவுத் கரோலினா நகரை தாக்கத் தொடங்கி இருக்கிறது.
அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற கடுமையாக புயலை அந்த மக்களும், அரசும் எதிர்கொள்ளவில்லை என்பதால், புளோரிடா, சவுத் கரோலினா மாநிலங்களில் அவசர நிலையை அதிபர்ஒபாமா பிரகடனம் செய்துள்ளார். அங்கு வாழும் 20 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
10 லட்சம் பேர்
சவுத் கரோலினா, ஜார்ஜியா பகுதிகளில் தொடர்ந்து கன மழையும், அதிவேக காற்றும் வீசி வருகிறது. இதன் காரணமாக சாலை ஓரத்தில் இருந்த மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து மின் இணைப்பும், போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 10 லட்சம் பேர் மின்சாரமில்லாமல் இருளில் தவித்து வருகின்றனர்.
மருத்துவ வசதியின்றி இதுவரை கன மழைக்கு புளோரிடாவில் இதுவரை 6 பேர் பலியாகி உள்ளனர். ஜார்ஜியா, சவுத் கரோலியா பகுதியை உலுக்கி வரும் மேத்யூ புயலால் கடலோரப்பகுதிகளில் 1அலைகள் 12 அடிவரை எழும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

17 இன்ஞ்
கடந்த 48 மணிநேரத்தில் சவானா, ஜார்ஜியா நகரங்களில் மட்டும் 17 இன்ஞ் அளவுக்கு மழை பொழிவு பதிவாகியுள்ளதாக அமெரிக்க வானிலை மையம் தெரிவித்துள்ளது.
3,500 பேர்
மேலும், மீட்புப்பணியில் ஈடுபட ஏறக்குறைய 3 ஆயிரத்து 500 பேர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். புளோரிடாவில் மட்டும் 5லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனனர்.
