கின்னஸ் சாதனை படைத்த ஐ.நா. யோகா நிகழ்ச்சி.. பெரும்பாலான நாடுகளை சேர்ந்தவர்கள் ஒன்றாக யோகா செய்து அசத்தல்..
ஐ.நா. சபையின் யோகா நிகழ்ச்சி, பெரும்பாலான நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக யோகா செய்ததற்காக கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி முதன்முறையாக பிரதமராக பதவியேற்ற போது, ஜூன் 21 ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக பொறுப்பேற்று 9 ஆண்டுகள் ஆகும் நிலையில், அதன் சாதனைகளைப் பற்றி நாடு முழுவதும் பரவி வருவதால், தற்போது உலக யோகா தினமும் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்து வருகிறது.
அந்த வகையில் இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஐ.நா தலைமையகத்தில் பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. 180 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்றனர். குறிப்பாக, பல்வேறு நாடுகளை சேர்ந்த இராஜதந்திரிகள், அதிகாரிகள், கல்வியாளர்கள், சுகாதார வல்லுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்துறை தலைவர்கள், ஊடகப் பிரமுகர்கள், கலைஞர்கள், ஆன்மீகத் தலைவர்கள், யோகா பயிற்சியாளர்கள் உட்பட அனைத்து தரப்பு பிரமுகர்கள் மற்றும் செல்வாக்குமிக்கவர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில் ஐ.நா சபை தலைமையகத்தில் பிரதமர் மோடி தலைமையில் யோகா நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. அதிகளவிலான நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒரே நேரத்தில் ஒன்றாக யோகா செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். உலகின் பெரும்பாலான நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக யோகா பயிற்சி செய்து கின்னஸ் புத்தகத்தில் இந்த நிகழ்வின் பெயரை பதிவு செய்தனர்.
முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி “ முழு மனித இனத்தின் சந்திப்பில் நாங்கள் இங்கு கூடியுள்ளோம். உங்கள் அனைவரையும் பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். ஏறக்குறைய ஒவ்வொரு தேசிய இனமும் இன்று இங்கு பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். யோகா என்றால் ஒன்றுபடுவது, எனவே நீங்கள் ஒன்றிணைவது யோகாவின் மற்றொரு வடிவத்தின் வெளிப்பாடு. யோகா இந்தியாவில் இருந்து வந்தது. இது மிகவும் பழமையான பாரம்பரியமாகும். இந்தியவின் மற்ற பாரம்பரியத்தை போலவே, யோகா சக்திவாய்ந்தது. யோகா ஒரு வாழ்க்கை முறை. ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான முழுமையான அணுகுமுறை. எண்ணங்கள் மற்றும் செயல்களில் நினைவாற்றலுக்கான வழி. தன்னுடனும், மற்றவர்களுடனும், இயற்கையுடனும் இணக்கமாக வாழ்வதற்கான ஒரு வழி.“ என்று கூறியிருந்தார்.