இந்தியா வரவிரும்பும் மியான்மர் மக்களுக்கு, கட்டணம் இல்லாமல் இலவசமாக விசா வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

சீனாவில் ஜியாமென் நகரில் 3 நாட்கள் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, அதன் பின்னர் மியான்மர் நாட்டுக்கு சென்றார். அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பிரதமர் மோடி அந்நாட்டின் அதிபர் ஹிடின் கியாவை சந்தித்தார்.

11 ஒப்பந்தங்கள்

மியான்மரில் உள்ள ராகைன் மாகாணத்தில் ஆயுதமேந்திய தீவிரவாத குழுக்கள் போராடி வருகின்றன. அவர்கள் போலீஸ் நிலையங்களை தாக்கியதில் பாதுகாப்பு படையினர் 12 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து ராணுவத்தினருக்கும் ஆயுதமேந்திய தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. இதில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த பிரச்சினை காரணமாக ஏராளமானோர் அகதிகளாக இந்தியாவுக்கும், வங்காளதேசத்துக்கும் வந்துள்ளனர்.

இச்சூழ்நிலையில் மியான்மர் சென்ற பிரதமர் மோடி அந்நாட்டின் அரசு ஆலோசரும் ஜனநாயக போராட்ட தலைவருமான ஆங் சான் சூகியை சந்தித்து பேசினார்.

இரு தலைவர்களும் நடத்திய பேச்சுவார்த்தையின்போது, இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு, ஜனநாயக அமைப்புக்களை பலப்படுத்துவது, தகவல் தொடர்பு மேம்பாடு உள்ளிட்ட 11 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

இலவச விசா

பின்னர் இரு தலைவர்களும் கூட்டறிக்கை வெளியிட்டனர். அதில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாவது-

மியான்மரின் ராகைன் மாகாணத்தில் நிகழ்ந்துவரும் தீவிரவாத வன்முறை சம்பவங்களில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்துள்ள சம்பவம் கவலை அளிப்பதாக உள்ளது.

இந்த பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் கூடிப்பேசி தீர்வு காண பாடுபடவேண்டும்.

இரு நாடுகளும் தங்களது நாட்டிலும் அண்டை நாடுகளிலும் தீவிரவாதம் உருவெடுப்பதை தடுத்து நிறுத்த பாடுபட உறுதி எடுத்துள்ளன.

மியான்மரின் வளர்ச்சிக்கு இந்தியா உதவும். மியான்மரில் அமைதி ஏற்பட ஆங் சான் சூகி மேற்கொண்டு வரும் முன்முயற்சிகள் பாராட்டத்தக்கது

.இந்தியா வர விரும்பும் மியான்மர் மக்களுக்கு இலவச விசா வழங்க முடிவுசெய்துள்ளோம். இந்த மகிழ்ச்சியான செய்தியை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

மியான்மருடான உறவை வலுப்படுத்த இந்தியா முன்னுரிமை அளித்து வருகிறது. இரு நாடுகளின் உறவு எதிர்காலத்தில் மேலும் பலப்படும். மேலும் இந்திய சிறைகளில் உள்ள மியான்மர் கைதிகள் 40 பேர் விடுவிக்கப்படுவர்.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

அப்போது ஆங் சான் சூகி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது-

நாட்டில் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. பல்வேறு சமூக மக்களிடையே பிரச்சினைகளை ஏற்படுத்தும் நோக்கத்தில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இதன் அடிப்படையில் ரோகிங்கியா முஸ்லிம் மக்களுக்கு ஆதரவாக அனுதாப உணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இவ்வாறு ஆங் சான் சுகி தெரிவித்துள்ளார்.

மியான்மரில் உள்ள ராகைன் மகாணத்தில் தீவிரவாதிகள் போராடி வருகின்றனர்.

இதனால் ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் ஏற்பட்டுள்ள மோதலில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்து 25 ஆயிரம் மக்கள் வங்காள தேச நாட்டிற்கு அகதிகளாக குடிபெயர்ந்துள்ளனர்.

ராகைன் மாகாண முஸ்லிம் மக்களுக்கு தன்னாட்சி உரிமைகள் வழங்க மறுத்து ஆங் சான் சுகி நடந்துகொள்ளும் செயலுக்கு உலக நாடுகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐநாவும் இந்த விசயத்தில் ராகைன் மாகாண மக்களுக்கு சட்ட அந்தஸ்து வழங்கவேண்டும் அல்லது தனி தேசிய உரிமை வழங்கப்படவேண்டும் என கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.