முன்னாள் கிரிக்கெட் வீரர் கொரோனாவிற்கு பலி..!
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸ் பாதிப்புகளை உண்டாக்கி இருக்கிறது. அங்கு இதுவரை 5,496 பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 96 பேர் பலியாகி இருகின்றனர். இந்த நிலையில் பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த ஸஃபார் சர்ஃபராஸ் கடந்த 1988ம் ஆண்டு பாகிஸ்தான் தொழில்முறை கிரிக்கெட்டில் அறிமுகமானார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு பெஷாவரில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து தனிமை சிகிச்சையில் வைத்து அவர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதல் கிரிக்கெட் வீரராக இவர் அறியப்படுகிறார். இதுவரை 15 முதல் தர போட்டிகளில் விளையாடி 616 ரன்கள் எடுத்திருக்கும் ஸஃபார் சர்ஃபராஸ் 1994ம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு பயிற்சியாளராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.