ஆபரேஷன் அஜய்: இஸ்ரேலில் இருந்து 286 இந்தியர்களுடன் தாயகம் திரும்பிய 5வது விமானம்
இஸ்ரேலில் உள்ள நேபாள குடிமக்களையும் அழைத்துவர நேபாள தூதர் உதவி கோரியதை அடுத்து இந்திய விமானம் 18 நேபாளிகளையும் இஸ்ரேலில் இருந்து அழைத்து வந்துள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியுறவுத்துறை 'ஆபரேஷன் அஜய்' திட்டம் மூலம் இந்தியாவுக்கு அழைத்துவருகிறது. அந்த வகையில் 18 நேபாள குடிமக்கள் உள்பட 286 பேருடன் 5வது சிறப்பு விமானம் செவ்வாய் இரவு டெல்லி வந்தடைந்தது.
இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், "ஆபரேஷன் அஜய் அப்டேட். மேலும் 286 பயணிகள் இந்தியாவுக்குத் திரும்பி வருகிறார்கள். மேலும் 18 நேபாள குடிமக்களும் இருக்கிறார்கள்" என்று கூறியிருக்கிறார். ஆபரேஷன் அஜய் மீட்புப் பணியின் தொடர்ச்சியாக டெல் அவிவில் இருந்து டெல்லிக்கு ஐந்தாவது விமானம் புறப்பட்டதாக இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்த விமானம் ஞாயிற்றுக்கிழமை டெல் அவிவ் சென்றபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானம் ஜோர்டான் சென்று பழுது நீக்கப்பட்ட பின் மீண்டும் டெல் அவிவ் நகருக்குத் திரும்பியது. இதனால் செவ்வாய் காலை டெல்லி வரவிருந்த விமானம், செவ்வாய் இரவில் டெல்லியை அடைந்தது. விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் நாடு திரும்பிய இந்தியர்களை வரவேற்றார்.
இஸ்ரேலில் சிரமங்களைச் சந்தித்துவரும் 18 நேபாள குடிமக்களை அழைத்துவருவது தொடர்பாக இஸ்ரேலுக்கான நேபாள தூதர் காந்தா ரிசால் இந்திய தூதரகத்திடம் உதவி கோரியுள்ளார். அதன்படி இந்திய விமானம் நேபாளிகளையும் இஸ்ரேலில் இருந்து அழைத்து வந்துள்ளது.
இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே போர் மூண்டிருப்பதால், இஸ்ரேலில் இருந்து தாயகம் திரும்ப விரும்பும் இந்தியர்களை அழைத்துவர ஆபரேஷன் அஜய் மீட்புப் பணிகள் அக்டோபர் 12 அன்று தொடங்கப்பட்டது.
இதன்படி, ஒரு பகுதியாக சிறப்பு விமானங்கள் மூலம் நாடு திரும்ப விரும்பும் இந்தியர்கள் அழைத்துவரப்படுகிறார்கள். கடந்த வாரம், டெல் அவிவில் இருந்து வந்த நான்கு சிறப்பு விமானங்களில் குழந்தைகள் உட்பட மொத்தம் 918 இந்தியர்கள் இந்தியாவுக்குத் திரும்பினர்.
ஹமாஸ் பயங்கரவாதக் குழுவினர் அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது பயங்கர ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலை தொடர்ந்து, இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் மூண்டது. ஹமாஸ் குழுவினரின் தாக்குதல்களில் 1,300க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் அப்பாவி பொதுமக்கள். குழந்தைகள் உள்பட பலரை பிணைக்கைதிகளாகவும் வைத்துள்ளனர்.
ஹமாஸின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இஸ்ரேஸ் பாதுகாப்புப் படையின் தாக்குதல்களிலும் 1,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் குழுவினரை முற்றிலும் அழிக்கும் வரை போர் தொடரும் என்று இஸ்ரேல் அறிவித்திருக்கிறது.
1000 கிலோ பன்றி கறி அன்னதானம்! தடபுடலாக நடந்த சுடலை மாடன் கோயில் கொடை விழா!