மனைவியைக் கொன்ற இந்திய இளைஞர் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.2 கோடி பரிசு: FBI அறிவிப்பு
சேத்தன்பாய் படேல், 2015ஆம் ஆண்டு மேரிலாந்தின் ஹனோவரில் உள்ள டன்கின் டோனட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, அவரது மனைவி பாலக்கைக் கொன்றுள்ளார்.
பத்ரேஷ்குமார் சேத்தன்பாய் படேலைக் கைது செய்ய எந்தவொரு தகவல் கொடுத்தாலும் ரூ.2.1 கோடி வரை வெகுமதி வழங்கப்படும் என அமெரிக்க மத்திய புலனாய்வுப் பிரிவு (FBI) அறிவித்துள்ளது. எஃப்.பி.ஐ-யின் பத்து தேடப்பட்டும் குற்றவாளிகள் பட்டியலில் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது.
“ஏப்ரல் 12, 2015 அன்று மேரிலாந்தின் ஹனோவரில் உள்ள ஒரு டோனட் கடையில் பணிபுரியும்போது, மனைவியைக் கொன்றுவிட்டுத் தப்பியோடிய முக்கியக் குற்றவாளி பத்ரேஷ்குமார் சேத்தன்பாய் படேலைக் கைது செய்வதற்கான தகவல் கொடுத்தால் FBI 250,000 டாலர் வரை வெகுமதி அளிக்கும்” என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
சேத்தன்பாய் படேல், 2015ஆம் ஆண்டு மேரிலாந்தின் ஹனோவரில் உள்ள டன்கின் டோனட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, அவரது மனைவி பாலக்கைக் கொன்றுள்ளார். அவர் கடையின் பின்புறத்தில் சமையலறைக் கத்தியால் மனைவி பாலக்கை பல இடங்களில் கத்தியால் குத்தியுள்ளார்.
இரவு நேரத்தில் வாடிக்கையாளர்கள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த வழக்கில் சேத்தன்பாய் படேலைக் கைது செய்ய ஏப்ரல் 2015 இல் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், சேத்தன்பாய் படேல் கைதுக்கு முன் தப்பியோடி தலைமறைவாக இருக்கிறார்.
"பத்ரேஷ்குமார் படேல் மீதான குற்றச்சாட்டுகளில் மிக அதிகமான வன்முறைத் தன்மை இருப்பதால் FBI இன் முதல் பத்துப் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்" என்று FBI இன் பால்டிமோர் அலுவலகத்தின் சிறப்பு முகவரான கோர்டன் பி ஜான்சன் கூறியுள்ளார்.