FACT CHECK: 9 ஆண்டுகளுக்கு முன் மாயமான மலேசிய விமானம் கடலுக்கடியில் கண்டுபிடிக்கப்பட்டதா? வைரல் போட்டோ..
2014-ம் ஆண்டில் காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH370, தற்போது நீருக்கடியில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
மார்ச் 8, 2014 அன்று, மலேசியன் ஏர்லைன்ஸின் MH370 என்ற பயணிகள் விமானம், மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பெய்ஜிங் செல்லும் வழியில் மாயமானது. விமானத்தைக் கண்டுபிடிப்பதற்கு சர்வதேச அளவில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், விமானத்தின் பாகங்களோ அல்லது அது காணாமல் போனதற்கான உறுதியான விளக்கமோ கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் விமானம் மாயமானது குறித்து பல்வேறு கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில் மாயமான மலேசிய விமானம் தற்போது கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறி புகைப்படங்கள் மற்றும் வீடியோ வைரலாகி வருகிறது. ட்விட்டர் பல பயனர்கள் குறித்து பதிவிட்டுள்ளனர். அந்த பதிவில் "9 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மலேசிய விமானம் MH370 கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டது. விமானத்தில் 239 பயணிகள் இருந்தனர். ஆனால் கண்டுபிடிக்கப்பட்ட விமானத்தில் மனித எலும்புக்கூடு இல்லை..” என்ற தலைப்புடன் நீருக்கடியில் கைவிடப்பட்ட விமானத்தின் சிதைவின் வைரலான படத்தை பல சமூக ஊடக பயனர்கள் சமீபத்தில் ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.
இதையும் படிங்க : ஏழைப்பெண்ணுக்கு மசூதியில் இந்து முறைப்படி நடந்த திருமணம்... ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்த கேரளா ஸ்டோரி வீடியோ வைரல்
உண்மை என்ன? : மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH370 பற்றிய சமீபத்திய தகவல்களைக் கண்டறிய, ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க் உண்மை சரிபார்ப்பு சோதனை நடத்தியது. இருப்பினும், விமானம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறும் நம்பகமான செய்திகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மேற்கு இந்தியப் பெருங்கடலில் கண்டெடுக்கப்பட்ட சில கடல் குப்பைகள் காணாமல் போன விமானத்திற்கு சொந்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மலேசிய அரசாங்கத்தால் பகிரங்கப்படுத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விமானத்தின் இடிபாடுகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க், விமானச் சிதைவுகளின் வைரலான படத்தை கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் தேடலை மேற்கொண்டது. அதன்படி, சிஎன்.என் நியூஸில் வெளியான ஒரு கட்டுரை வந்தது. லாக்ஹீட் மார்ட்டின் எல்1011 டிரிஸ்டார் விமானத்தின் உடைந்த பாகங்கள் என்றும், இது 2019 இல் ஜோர்டானின் அகபா வளைகுடாவில் மூழ்கடிக்கப்பட்டது என்பதும் தெரியவந்தது. `கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்கவும் டைவ் சுற்றுலாவை ஊக்குவிக்கவும் இந்த மேற்கொள்ளப்பட்டது.
மூழ்கிய விமானங்களின் படங்களைப் பெற ஏராளமான டைவ்களை மேற்கொண்ட அண்டர்வாட்டர் புகைப்படக் கலைஞர் பிரட் ஹோல்சரின் முயற்சிகளும் சிஎன்,என் வெளியிட்ட கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவரின் இன்ஸ்டா பக்கத்தில் நீரில் மூழ்கிய டிரிஸ்டார் விமானத்தின் பல படங்கள் மற்றும் காட்சிகளை பார்க்க முடிகிறது.
வைரலான புகைப்படத்தில் உள்ள விமானம் மற்றும் ட்ரைஸ்டார் விமானத்தின் உடைந்த பாகங்கள் என்பதும் உறுதியாகி உள்ளது. எனவே ஜோர்டானில் உள்ள அகபா வளைகுடாவில் லாக்ஹீட் மார்ட்டின் L1011 ட்ரைஸ்டார் ஜெட் விமானத்தின் புகைப்படம் வைரலாகி வருகிறது, இது மலேசிய ஏர்லைன்ஸின் காணாமல் போன MH370 விமானத்தின் பாகங்கள் இல்லை என்பது உறுதியாகி உள்ளது. ஆனால் மலேசிய ஏர்லைன்ஸின் பாகங்கள் என்ற பெயரில் பரப்பப்படுகிறது.
இதையும் படிங்க : #Breaking : தானியங்கி இயந்திரங்கள் மூலம் மது விற்க தடை கோரிய வழக்கு.. உயர்நீதிமன்றம் தள்ளுபடி