சீனா ஜியு தியான் என்ற புதிய ஆளில்லா வான்வழி ட்ரோன் தாய் விமானத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது 100க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி எதிரியை நிலைகுலையச் செய்யும் திறன் கொண்டது. இந்த விமானம் சீன ராணுவத்தின் வான் பாதுகாப்பு, தாக்குதல் திறன்களை மேம்படுத்தும்.

உலகம் முழுவதும் தற்போது ராணுவ பாதுகாப்பு மாறி வருகிறது. தங்களது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சிறந்த ராணுவ தளவாடங்களை விற்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். தரையை யார் ஆக்கிரமிப்பது என்ற போட்டி மறைந்து, வானத்தை யார் ஆக்ரமிப்பது என்ற போட்டி ஏற்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் முதன் முதலில் அதிக பலத்துடன் களம் இறங்கி இருப்பது சீனா. ஆளில்லா வான்வழி ட்ரோன் தாய் விமானத்தை இறக்கி இருக்கிறது. இது ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி எதிரியை நிலைநடுங்க வைக்கும் என்று கூறப்படுகிறது.

சீனாவின் ட்ரோன்களை ஏந்தி செல்லும் ஜியு தியான் எனப்படும் இந்த தாய் விமானம் ஜூன் மாத இறுதிக்குள் தனது முதல் பணியைத் தொடங்கும் என்று தெரிய வந்துள்ளது. ட்ரோன் தாய் விமானம் UAV சீனாவை ஆட்சி செய்யும் மக்கள் விடுதலை ராணுவத்தால் (PLA) பல முறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஜியு தியான் என்றால் என்ன?

ஜியு தியான் என்பதை மொழி பெயர்த்தால் "உயர் வானம்" என்று பொருள்படுகிறது. சீனாவின் முதன்மையான ஜுஹாய் விமான கண்காட்சியில் இந்த ட்ரோன் விமானம் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 7,000 கிமீ தூரத்திற்கு பறக்கக் கூடியது. 15,000 மீட்டர் (50,000 அடி) உயரத்திற்கு செல்லும் திறன் கொண்டது. 16 டன் வரை வெடிமருந்துகளையும் சிறிய ட்ரோன்களையும் சுமந்து செல்லும்.

விமானத்தின் இருபுறத்திலும் இருந்து வெடிமருந்துகளை அல்லது ட்ரோன்களை அவிழ்த்து விடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சீன ராணுவத்தில் ஜியு தியான் எவ்வாறு சேர்க்கப்படும்

ஜியு தியானின் பயன்பாடு சீன ராணுவத்தின் திறன்களுக்கு வலு சேர்க்கும் வகையில் உள்ளது. எதிரியின் வான் பாதுகாப்பு அமைப்புகளை முறியடிக்க இந்த ட்ரோன் விமானம் பயன்படுத்தப்படும். இந்தியாவில் எப்படி எஸ் 400 பயன்படுத்தப்படுகிறதோ அதேபோல், வானத்தில் பறந்து எதிரிகளின் ஏவுகணைகளை அழிக்கும் திறன் கொண்டது. ட்ரோன்களையும் வீசும்.

இந்த விமானத்தில் பல்வேறு வகையான சுமை தொகுப்புகளை சுமந்து செல்வதற்கான எட்டு வெளிப்புற ஹார்ட்பாயிண்டுகள் உள்ளன. இவற்றில் கண்காணிப்பு ட்ரோன்கள், காமிகேஸ் யுஏவிகள், க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் பிஎல்-12இ போன்ற நடுத்தர, தூர வான் ஏவுகணைகள் ஆகியவை அடங்கும்.

தைவானும், சீனாவும்:

தைவானுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அதிகரிக்கும் போது தாய் விமானம் பற்றிய சீனாவின் அறிவிப்பு வருகிறது. சீனாவில் இருந்து பிரிந்து சென்ற மாகாணமாக தைவானை பெய்ஜிங் பார்க்கிறது. தாங்கள் தன்னாட்சி பெற்ற நாடாக இருக்கிறோம் என்று தைவான் கூறி வந்தாலும், சீனா தொடர்ந்து தைவானுக்கு எதிராக களத்தில் போராடி வருகிறது. தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா இருக்கிறது. இந்த சூழலில்தான் ட்ரோன்களை சரமாரியாக வீசும் தாய் விமானம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போரின் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், தைவானின் ஜனாதிபதி லாய் சிங்-டே, "இன்று, 80 ஆண்டுகளுக்குப் பிறகு, ஐரோப்பியப் போரில் பங்கேற்ற பல ஜனநாயக நாடுகளைப் போலவே இன்றும் சவால்களை எதிர்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

சீனாவின் நீர் மூழ்கிக் கப்பல்கள்

கனரக ஜியு தியான் ட்ரோன் மட்டுமின்றி, சீனாவின் ஸ்டெல்த் காம்பாட் CH-7 மற்றும் நடுத்தர, உயர்ரக, நீர்மூழ்கி கப்பல்கள் சீனாவிடம் இருக்கிறது. இதுமட்டுமின்றி, சீனாவின் Wing Loong-X,அமெரிக்காவின் RQ-4 Global Hawk மற்றும் MQ-9 Reaper ஆகியவற்றுக்கு சவால் விடும் வகையில் இருப்பதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

சீனா தனது ராணுவத்தை எவ்வாறு நவீனமயமாக்குகிறது

அமெரிக்க பாதுகாப்புத் துறை (DoD) சீனாவின் ராணுவம் குறித்த 182 பக்க அறிக்கையை டிசம்பரில் வெளியிட்டது. அமெரிக்காவுடன் சாத்தியமான போர் ஏற்பட்டால், சீனா தனது அணுசக்தியை பயன்படுத்தும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. சீனாவிடம் 600-க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் இருப்பதாகவும், இது கடந்த ஆண்டு 500 ஆக இருந்ததாகவும், 2030 ஆம் ஆண்டுக்குள் சீனாவில் 1,000 க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் மதிப்பிடப்பட்டு இருக்கிறது.

சீனாவின் பிஎல்ஏ என் என்ற திட்டம்

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளுக்கு (ICBMs) மூன்று புதிய ஏவுகணை தளங்களை சீனா கட்டி முடித்துள்ளது. பெய்ஜிங் இப்போது "உலகின் முன்னணி ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஆயுதக் களஞ்சியத்தை" கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது. பிஎல்ஏ என் திட்டம் என்பது சீனாவின் 370 கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களுடன் உலகின் மிகப்பெரிய கடற்படையாகும். அதே நேரத்தில் 2025 ஆம் ஆண்டுக்குள் 395 கப்பல்களையும் 2030 ஆம் ஆண்டுக்குள் 435 கப்பல்களையும் கொண்டிருக்கும் என்று அமெரிக்க பாதுகாப்பு அறிக்கை குறிப்பிடுகிறது.