இந்த ஒரு விஷயம் மட்டும் நடந்தால் போதும்..!! அடுத்த நொடியில் கொரோனாவுக்கு மோட்சம்தான்..!!
பிரிட்டிஷ் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள "AZD1222" என்று பெயரிடப்பட்டுள்ள தடுப்பூசி தற்போது மனித சோதனையில் இருந்து வருகிறது,
கொரோனா வைரஸ் நோய் தொற்று உலகளவில் வேகமாக பரவி வரும் நிலையில், இங்கிலாந்து மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரிட்டிஷ் மருத்து ஆராய்ச்சி நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இணைந்து கண்டுபிடித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்து பரிசோதனை வெற்றி பெறுவதற்கு முன்னரே அதன் உற்பத்தி தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வூபே மாகாணம் வூஹானில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது கிட்டத்தட்ட 180 க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளன. உலகளவில் கொரோனாவுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 69 லட்சத்து 82 ஆயிரத்தை கடந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, ஸ்பெயின், பிரிட்டன், இந்தியா, இத்தாலி உள்ளிட்ட நாடுகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் 20 லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
சுமார் 1 லட்சத்து 12 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர், இந்நிலையில் கொரோனா வைரஸ் பட்டியலில் பிரிட்டன் ஐந்தாவது இடத்தில் உள்ளது, 2 லட்சத்து 84 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் அங்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த நான்கு மாதத்துக்கும் அதிகமாக இந்தவைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வரும் நிலையில் அது கட்டுக்கடங்காமல், மக்களை கொத்துக் கொத்தாக தாக்கி வருகிறது. இந்த வைரசுக்கு பிரத்தியேக தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும்வரை இதை கட்டுப்படுத்த முடியாது என மருத்துவர்கள் கூறிவரும் நிலையில், உலகமே தடுப்பூசியை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள பிரிட்டிஷ் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள "AZD1222" என்று பெயரிடப்பட்டுள்ள தடுப்பூசி தற்போது மனித சோதனையில் இருந்து வருகிறது, இந்நிலையில் அது வெற்றிகரமாக அமைந்தால், அடுத்த சில மாதங்களில் மில்லியன் கணக்கான டோஸ்கள் தயாரிக்கப்படும் என்றும், பரிசோதனை வெற்றி பெற்றவுடன் 2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் உலக அளவில் இரண்டு பில்லியன் அளவிற்கு தடுப்பூசி உற்பத்தி செய்யப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக 100 மில்லியன் டோஸ் உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இது குறித்து வானொளி ஒன்றுக்கு பேட்டி அளித்த அஸ்ட்ராஜெனெகாவின் தலைமை நிர்வாகி பாஸ்கல் சோரியட் கூறியதாவது :- நாங்கள் இப்போது இந்த தடுப்பூசியை தயாரிக்க தொடங்கியிருக்கிறோம், அந்த ஆய்வின் முடிவு வந்தவுடன் அது மக்கள் பயன்படுத்த தயாராக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உற்பத்தியை தொடங்கி இருக்கிறோம். கோடிக்கணக்கான பணத்தை பணையம் வைத்து இந்த உற்பத்தியில் இறங்கி இருக்கிறோம். ஒருவேளை தடுப்பூசி சரியாக வேலை செய்யாவிட்டால் முதலீடு செய்யும் நிதிக்கு ஆபத்து என்பதைத் தெரிந்தும் இதில் நாங்கள் இறங்கி இருக்கிறோம், ஆகஸ்ட் மாத இறுதியில் மருந்து பரிசோதனை நிறைவுபெறும், ஒருவேளை நாங்கள் எதிர்பார்த்ததை போல மருந்து வெற்றி அடையாவிட்டால் நாங்கள் தயாரித்த அனைத்தும் வீணாகிவிடும், ஆனாலும் இது போன்ற நெருக்கடியான நேரத்தில் முன்வந்து பங்களிக்க வேண்டும் என்பதை உணர்ந்து நாங்கள் எந்த லாப நோக்கமும் இல்லாமல் இதை செய்ய முடிவு செய்துள்ளோம் எனக் கூறியுள்ளார்.
ஆரம்பக் கட்ட பரிசோதனையில் 18 முதல் 55 வயதுடைய ஆரோக்கியமான தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி பரிசோதிக்கப்பட்டது, மேலும் வரவிருக்கிற வாரங்களில் தேர்வு செய்யப்பட்டுள்ள சுமார் 10 ஆயிரத்து 760 தன்னார்வலர்களுக்கு இந்த தடுப்பூசி பரிசோதிக்கப்பட உள்ளது. மேலும் சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை அந்த குழுவில் இடம்பெற வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் இந்த மருந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அஸ்ட்ராஜெனெகா சமீபத்தில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவுடன் இணைந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி மருந்தை இந்தியாவில் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை அறிவித்தது குறிப்பிடதக்கது.