இங்கிலாந்தில் ஆணாக இருந்து பெண்ணாக மாறி சிகிச்சை எடுத்துக்கொண்டவர், தனக்கு ‘இந்தியா’ என பெயரிட்டுக் கொண்டார். இவர் இங்கிலாந்தின் முதல் திருநங்கை டி.வி நிருபர் ஆவார். 

லண்டனின் ஐ.டி.வி.யில் நிருபராகவும், செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றி வந்தவர் ஜோனாத்தன் வில்லோபி(வயது51). இங்கிலாந்தில் உள்ள ஐ.டி.வி நேயர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்றவராக விளங்கினார். திருமணமாகி விவாகரத்தாகி ஒரு குழந்தைக்கு தந்தையான ஜோனாத்தன், கடந்த சில ஆண்டுகளாக தனது உடலில் ஏற்பட்ட மாற்றங்களால் மிகவும் அவதிப்பட்டார். 

இதனால், ஆணாக இருந்த ஜோனாத்தன், கடந்த 2010-ம் ஆண்டு தனது பணியை ராஜினாமா செய்து, தன்னை பெண்ணாக மாற்றிக்கொள்ள அறுவை சிகிச்சை எடுக்கச் சென்றார். 

இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் பிரிக்டன் நகரில் உள்ள என்.எச்.எஸ். மருத்துவமனையில், அறுவசை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறினார். இதற்காக ஏறக்குறைய ரூ.12 லட்சம்(14 ஆயிரம் பவுண்ட்) செலவு செய்துள்ளார். 

பெண்ணுக்கான நளினமான நடை, ஆடம்பர உடை, நீண்ட தலைமுடி என தன்னை முழுமையாக பெண்ணாக ஜோனாத்தன் மாற்றிக்கொண்டார். ஜோனத்தான்வில்லோபி என்ற தன்னுடைய பெயரையும் ‘இந்தியா’ வில்லோபி என மாற்றிக்கொண்டார். 

கடந்த 6 ஆண்டுகள் இடைவெளியில் மீண்டும் ஐ.டி.வியில் நேற்று முன்தினம் நிருபராக பணிக்கு சேர்ந்தார். இங்கிலாந்தில் திருநங்கை ஒருவர் நிருபராக பணியில்சேருவது இதுதான் முதல் முறையாகும்.

பெண்ணாக மாறிய பின் தனது முதல் டி.வி அனுபவம் குறித்து இந்தியா வில்லோபி கூறுகையில், “ ஐ.டி.வி. பணி என்பது மிகச் சிறந்த அனுபவம். அங்கு நான் மீண்டும் பணிக்கு வந்ததை அனைவரும் வரவேற்கிறார்கள்.

கடந்த 5 ஆண்டுகளாக எனது உடலில் ஏற்பட்ட மாற்றங்களால் நியூகேஸ்டில் நகரில் பெண் உடை அணிந்து, மக்கள் தொடர்பு அதிகாரியாக 5 நாட்கள் பணியாற்றுவேன். வார இறுதியில் எனது மகனுடன் நேரத்தைச் செலவழிக்க ஆணுக்குரிய கோட், சூட், உடை அணிந்து கும்புரியா நகருக்கு திரும்புவேன். அதன்பின், தான் பெண்ணாக மாறுவதற்கான அறுவை சிகிச்சை எடுக்கச் சென்றேன்'' என்று தெரிவித்தார்.