மனிதநேயத்தை வெறுப்பவர் ஜார்ஜ் சொரோஸ்: எலான் மஸ்க் காட்டம்!
ஜார்ஜ் சொரோஸ் மனிதநேயத்தை வெறுப்பவர் என தொழிலதிபர் எலான் மஸ்க் கடுமையாக சாடியுள்ளார்
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, எக்ஸ் ஆகியவற்றின் உரிமையாளருமான எலான் மஸ்க், கோடீஸ்வர முதலீட்டாளரும், சமூக சேவகருமான ஜார்ஜ் சொரோஸை மனிதநேயத்தை வெறுப்பவர் என சாடியுள்ளார். அவர் மற்ற நாட்டு விஷயங்களிலும் தலையிடுவதாக எலான் மஸ்க் விமர்சித்துள்ளார்.
ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்டில் பேசிய எலான் மஸ்க், “ஜார்ஜ் சொரோஸ் அடிப்படையில் மனிதநேயத்தை வெறுக்கிறார் என்று நான் நினைக்கிறேன். அவர் சமூகத்தின் கட்டமைப்பை அழிக்கும் விஷயங்களைச் செய்கிறார். குற்றங்களில் மென்மையான போக்கை கடைபிடிக்கும் மாவட்ட வழக்கறிஞர்களாக தேர்ந்தெடுக்க மீண்டும் மீண்டும் அவர் உதவுகிறார்.” என்றார்.
முற்போக்கான வழக்கறிஞர்களுக்கு நிதியளிப்பதும், அவர்களை சட்டப்பூர்வமாக்குவதற்கும் ஜார்ஜ் சொரெஸின் முயற்சிகள் பல அமெரிக்க நகரங்களில் குறிப்பிடத்தக்க எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் எலான் மஸ்க் கூறியுள்ளார். சட்டங்களை நிலைநிறுத்தத் தவறிய மாவட்ட வழக்கறிஞர்கள் சட்டங்களை மாற்றுவதற்கான குறுக்குவழி யுக்தியை கையாள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“சட்டங்களை மாற்றத் தேவையில்லை என்பதையும், அவை எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பதை மாற்ற வேண்டும் என்பதையும் சொரொஸ் உணர்ந்துள்ளார். யாரும் சட்டங்களைச் செயல்படுத்தத் தேர்வு செய்யவில்லை என்றால், அல்லது சட்டங்கள் வேறுபட்ட முறையில் செயல்படுத்தப்பட்டால், அது சட்டங்களை மாற்றுவது போன்றது.” என்றும் எலான் மஸ்க் கூறியுள்ளார்.
ஜனநாயகக் கட்சிக்கு அதிகமாக நிதி அளிப்பதில் ஜார்ஜ் சொரோஸ் முதலிடத்தில் இருப்பதாகவும், சாம் பேங்க்மேன்-ஃபிரை இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா முழுவதும் உள்ள மாவட்ட வழக்கறிஞர்கள் குற்றவாளிகள் மீது மிகவும் மென்மையாக நடந்து கொள்வதற்காக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், எலான் மஸ்க் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது அவரது எக்ஸ் தளத்தில் பேசுபொருளாகி உள்ளது.